Best Bharathiyar Quotes In Tamil Motivational Words In Tamil Wonderful Sayings From Bharathiyar

Best-Bharathiyar-Tamil-quotes-Whatsapp-Pictures-Facebook-HD-Wallpapers-images-inspiration-life-motivation-thoughts-sayings-free

 

44.யோக சித்தி


வரங் கேட்டல்




விண்ணும் மண்ணும்தனியாளும் -- எங்கள்

  .வீரை சக்தி நினதருளே -- என்றன்

கண்ணும் கருத்துமெனக் கொண்டு -- அன்பு

  கசிந்து கசிந்து கசிந்துருகி -- நான்

பண்ணும் பூசனைகள் எல்லாம் -- வெறும்

  பாலை வனத்தில்இட்ட நீரோ? -- உனக்

கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ -- அறி

  வில்லா தகிலம் அளிப்பாயோ?


1


நீயே சரணமென்று கூவி -- என்றன்

  நெஞ்சிற் பேருறுதி கொண்டு -- அடி

தாயே எனக்குமிக நிதியும் -- அறந்

  தன்னைக் காக்குமொரு திறனும் -- தரு

வாயே என்றுபணிந் தேத்திப் -- பல

  வாறா நினது புகழ் பாடி -- வாய்

ஓயே னாவதுண ராயோ?-நின

  துண்மை தவறுவதோர் அழகோ? 2


காளீ வலியசா முண்டி -- ஓங்

  காரத் தலைவியென் னிராணி -- பல

நாளிங் கெனையலைக்க லாமோ? -- உள்ளம்

  நாடும் பொருளடைதற் கன்றோ -- மலர்த்

தாளில் விழுந்தபயங் கேட்டேன் -- அது

  தாரா யெனிலுயிரைத் தீராய் -- துன்பம்

நீளில் உயிர்தரிக்க மாட்டேன் -- கரு

  நீலியென் னியல்பறி யாயோ? 3


குறிப்பு: இப் பாடல்களில் வரும் காளி, சக்தி, மாரி முதலியன உலகத்தின்

மூலசக்தியைக் குறிக்கும் பெயர்களாம்.


[முதற் பதிப்பு]:?தவறுவ தொருலகோ??


தேடிச் சோறுநிதந் தின்று -- பல

  சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம்

வாடித் துன்பமிக உழன்று -- பிறர்

  வாடப் பலசெயல்கள் செய்து -- நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்

  கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல

வேடிக்கை மனிதரைப் போலே -- நான்

   வீழ்வே னன்றுநினைத் தாயோ? 4


நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை

  நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்

முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்

  மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி

என்னைப் புதிய வுயிராக்கி-எனக்

  கேதுங் கவலையறச் செய்து -- மதி

தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்

  சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய். 5


தோளை வலியுடைய தாக்கி -- உடற்

  சோர்வும் பிணிபலவும் போக்கி -- அரி

வாளைக் கொண்டுபிளந் தாலும் -- கட்டு

  மாறா வுடலுறுதி தந்து -- சுடர்

நாளைக் கண்டதோர் மலர்போல் -- ஒளி

  நண்ணித் திகழுமுகந் தந்து -- மத

வேளை வெல்லுமுறை கூறித் -- தவ

  மேன்மை கொடுத்தருளல் வேண்டும். 6


எண்ணுங் காரியங்க ளெல்லாம் -- வெற்றி

  யேறப் புரிந்தருளல் வேண்டும் -- தொழில்

பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்

  பல்லோர் துணைபுரிதல் வேண்டும் -- சுவை

நண்ணும் பாட்டினொடு தாளம் -- மிக

  நன்றா வுளத் தழுந்தல் வேண்டும் -- பல

பண்ணிற் கோடிவகை இன்பம் -- நான்

  பாடத் திறனடைதல் வேண்டும்.

7


கல்லை வயிரமணி யாக்கல் -- செம்பைக்

  கட்டித் தங்கமெனச் செய்தல் -- வெறும்

புல்லை நெல்லெனப் புரிதல் -- பன்றி்ப்

  போத்தைச் சிங்கவே றாக்கல் -- மண்ணை

வெல்லத் தினிப்புவரச் செய்தல் -- என

  விந்தை தோன்றிட இந்நாட்டை -- நான்

தொல்லை தீர்த்துயர்வு கல்வி -- வெற்றி்

  சூழும் வீரமறி வாண்மை 8


கூடுந் திரவியத்தின் குவைகள் -- திறல்

  கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் -- இவை

நாடும் படிக்கு வினைசெய்து -- இந்த

  நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் -- கலி

சாடுந் திறனெனக்குத் தருவாய் -- அடி

  தாயே உனக்கரிய துண்டோ? -- மதி

மூடும் பொய்ம்மையிரு ளெல்லாம் -- எனை

  முற்றும் விட்டகல வேண்டும்;

9


ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை

  அச்சம் போயொழிதல் வேண்டும் -- பல

பையச் சொல்லுவதிலுங் கென்னே-முன்னைப்

  பார்த்தன் கண்ணனிவர் நேரா-என்னை

உய்யக் கொண்டருள வேண்டும்-அடி

  உன்னைக் கோடிமுறை தொழுதேன் -- இனி்

வையத் தலைமையெனக் கருள்வாய் -- அன்னை

  வாழி, நின்னதருள் வாழி.

ஓம் காளி வலிசாமுண்டீ

  ஓங்காரத் தலைவி என்இராணி.



10



--------------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


போற்றி அகவல்



போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!

மாற்றுவாய், துடைப்பாய், வளர்ப்பாய், காப்பாய்!

கனியிலே சுவையும் காற்றிலே யியக்கமுமா

கலந்தாற் போலநீ அனைத்திலும் கலந்தாய்.

உலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி!






 5

அன்னை, போற்றி! அமுதமே, போற்றி!

புதியதிற் புதுமையாய், முதியதில் முதுமையாய்,

உயிரிலே உயிராய்த், இறப்பிலும் உயிராய்,

உண்டெனும் பொருளில் உண்மையாய், என்னுளே

நானெனும் பொருளாய், நானையே பெருக்கித் 10

தானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,

கவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்,

பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,

யானென தின்றி யிருக்குநல் யோகியர்

ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய், 15

செய்கையாய், ஊக்கமாய், சித்தமாய், அறிவாய்

நின்றிடும் தாயே, நித்தமும் போற்றி!

இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி!

துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!

அமுதங் கேட்டேன், அளிப்பாய் போற்றி! 20

சக்தி, போற்றி! தாயே, போற்றி!

முக்தி, போற்றி! மோனமே, போற்றி!

சாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி!


------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


காணி நிலம்



காணி நிலம்வேண்டும், -- பராசக்தி

காணி நிலம்வேண்டும்; -- அங்குத்

தூணில் அழகியதாய் -- நன்மாடங்கள்

துய்ய நிறத்தினவாய் -- அந்தக்

காணி நிலத்திடையே -- ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும்; -- அங்குக்

கேணி யருகினிலே -- தென்னைமரம்

கீற்று மிளநீரும்,


1


பத்துப் பன்னிரண்டு -- தென்னைமரம்

பக்கத்திலே வேணும்; -- நல்ல

முத்துச் சுடர்போலே -- நிலாவொளி

முன்பு வரவேணும்;-அங்குக்

கத்துங் குயிலோசை-சற்றே வந்து

காதிற் படவேணும்;-என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்

தென்றல் வரவேணும். 2


[பாட பேதம்]:

‘வாச்வினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி’

என்பது ஒரு பிரதியில்


‘இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி என்ற வரியை அடுத்து காணப் படுகிறது.


-- கவிமணி


பாட்டுக் கலந்திடவே -- அங்கே யொரு

பத்தினிப் பெண்வேணும்; -- எங்கள்

கூட்டுக் களியினிலே -- கவிதைகள்

கொண்டு தரவேணும்; -- அந்தக்

காட்டு வெளியினிலே, -- அம்மா, நின்றன்

காவ லுறவேணும்; -- என்றன்

பாட்டுத் திறத்தாலே -- இவ்வையத்தைப்

பாலித் திடவேணும்.







3



--------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


மஹாசக்தி வெண்பா




தன்னை மறந்து சகல உலகினையும்

மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி -- அன்னை

அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்

துவளா திருத்தல் சுகம்.

1


நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி

அஞ்சி உயிர்வாழ்த லறியாமை; -- தஞ்சமென்றே

வையமெலாங் காக்கு மஹாசக்தி நல்லருளை

ஐயமறப் பற்ற லறிவு. 2


வையகத்துக் கில்லை, மனமே, நினக்குநலஞ்

செய்யக் கருதியிவை செப்புவேன் -- பொய்யில்லை

எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற

சொல்லால் அழியும் துயர். 3


எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்

விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம்-பண்ணியதோர்

சக்தியே நம்மைச் சமைத்ததுகாண், நூறாண்டு

பக்தியுடன் வாழும் படிக்கு.





4


-----------------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


ஓம் சக்தி



நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

  நிறைந்த சுடர்மணிப்பூண்.

பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள்

  பார்வைக்கு நேர்பெருந்தீ.

வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி

  வையக மாந்தரெல்லாம்

தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர் சக்தி

  ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். 1


“நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி

  நலத்தை நமக்கிழைப்பாள்;

அல்லது நீங்கும்” என்றேயுல கேழும்

  அறைந்திடு வாய்முரசே!

சொல்லத் தகுந்த பொருளன்று காண் இங்குச

 சொல்லு மவர்தமையே

அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்

  ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். 2


நம்புவ தேவழி யென்ற மறைதன்னை

  நாமின்று நம்பிவிட்டோம்.

கும்பிட்டெந் நேரமும் “சக்தி” யென் றாலுனைக்

  கும்பிடு வேன்மனமே.

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்

  அச்சமில் லாதபடி

உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம

  ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். 3


பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்திடு,

  போற்றி உனக்கிசைத்தோம்;

அன்னை பராசக்தி என்றுரைத்தோம் தளை

  அத்தனையுங் களைந்தோம்;

சொன்ன படிக்கு நடந்திடு வாய் மன

  மே தொழில் வேறில்லை காண்;

இன்னுமதேயுரைப் போம் சக்தி

  ஓம்சக்தி ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

4


வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு

  ளாக விளங்கிடுவாய்!

தெள்ளு கலைத்தமிழ் வாணி, நினக்கொரு

  விண்ணப்பஞ் செய்திடுவேன்,

எள்ளத் தனைப்பொழுதும்பயனின்றி

  இரா தென்றன் நாவினிலே

வெள்ள மெனப்பொழி வாய்சக்தி

  வேல்சக்தி வேல்சக்தி வேல்சக்தி வேல்!








5



-----------------------------------------


தோத்திரப் பாடல்கள்


கேட்பன



நல்லதோர் வீணைசெய்தே -- அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி, சிவசக்தி! -- எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்,

வல்லமை தாராயோ, -- இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி, சிவசக்தி! -- நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1


விசையுறு பந்தினைப்போல் -- உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன், -- நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் -- சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன்; -- இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?









2

-----------------------------------------


தோத்திரப் பாடல்கள்


பராசக்தி



கதைகள் சொல்லிக் கவிதை யெழுதென்பார்;

காவி யம்பல நீண்டன கட்டென்பார்;

விதவிதப்படு மக்களின் சித்திரம்

மேவு நாடகச் செய்யுளை மேவென்பார்;

இதயமோ எனிற் காலையும் மாலையும்

எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்

எதையும் வேண்டில தன்னை பராசக்தி

இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே. 1


நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்

நையப் பாடென் றொருதெய்வங் கூறுமே;

கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்

கொண்டு வையம் முழுதும் பயனுறப்

பாட்டி லேயறங் காட்டெனு மோர்தெய்வம்

பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்

ஊட்டி எங்கும் உவகை பெருகிட

ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே. 2


நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்

நானி லத்தவர் மேனிலை யெய்தவும்

பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்

பண்ணிலே களி கூட்டவும் வேண்டி நான்

மூட்டும் அன்புக் கனலோடு வாணியை

முன்னு கின்ற பொழுதிலெ லாங்குரல்

காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்

கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள்.

3


மழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான்

வானி ருண்டு கரும்புயல் கூடியே

இழையு மின்னல் சரேலென்று பாயவும்

ஈர வாடை இரைந்தொலி செய்யவுமு

உழையெலாம் இடை யின்றியிவ் வானநீர்

ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்

“மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்!

வாழ்க தாய்!” என்று பாடுமென் -- வாணியே.









4


சொல்லி னுக்கெளிதாகவும் நின்றிடாள்

சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்

அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்

அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.

கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்,

கால வெள்ளத் திலேநிலை காணுங்கால்,

புல்லி னில்வயி ரப்படை தோன்றுங்கால்,

பூத லத்தில் பராசக்தி தோன்றுமே! 5



----------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


சக்திக் கூத்து


[ராகம் -- பியாக்]



பல்லவி


தகத் தகத் தகத் தகதகவென் றாடோமோ? -- சிவ

சக்தி சக்தி சக்தி யென்று பாடோமோ?

(தக)  


சரணங்கள்


அகத்தகத் தகத்தினிலே உள் நின்றாள் -- அவள்

அம்மை யம்மை எம்மைநாடு பொய்வென்றாள்

தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே

சரணமென்று வாழ்ந்திடுவோம் நாமென்றே


(தக) 1


புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்

புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்

குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே -- அது

குழந்தையதன் தாயடிக்கீழ் சேய்போலே.

(தக) 2


இந்திரனா ருலகினிலே நல்லின்பம்

இருக்கு தென்பார் அதனையிங்கே கொண்டெய்தி

மந்திரம் போல வேண்டுமடா சொல்லின்பம் -- நல்ல

மதமுறவே அமுதநிலை கண்டெய்தித்

(தக)

3


[பாட பேதம்]: ‘வயிறப்படை காணுங்கால்.’


-- கவிமணி

[முதற் பதிப்பு]: ‘தாயடிக்கீழ் செய்போலே.’


------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


சக்தி



துன்ப மிலாத நிலையே சக்தி

  தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி

அன்பு கனிந்த கனிவே சக்தி

  ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி

இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி

  எண்ணத் திருக்கும் எரியே சக்தி

முன்பு நிற் கின்ற தொழிலே சக்தி

  முத்தி நிலையின் முடிவே சக்தி. 1


சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி

  சொல்லில் விளங்கும் சுடரே சக்தி

தீம்பழந் தன்னில் சுவையே சக்தி

  தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி

பாம்பை அடிக்கும் படையே சக்தி

  பாட்டினில் வந்த களியே சக்தி

சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்

  சங்கரன் அன்புத் தழலே சக்தி. 2


வாழ்வு பெருக்கும் மதியே சக்தி

  மாநிலங் காக்கும் மதியே சக்தி

தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி

  சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி

வீழ்வு தடுக்கும் விறலே சக்தி

  விண்ணை யளக்கும் விரிவே சக்தி

ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி

  உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி.









3



------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


வையம் முழுதும்


கண்ணிகள்



வையம் முழுதும் படைத்தளிக் கின்ற

மஹாசக்தி தன்புகழ் வாழ்த்துகின்றோம்,

செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி

சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே.

1


பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்

புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம்,

வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே.

2


வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை

மேவிடும் சக்தியை மேவுகின்றோம்,

ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை

யாங்கள் அறிந்திட வேண்டுமென்றே. 3


உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்

தோங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்,

பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்

பாலித்து நித்தம் வளர்க்கவென்றே.

4


சித்தத் திலேநின்று சேர்வ துணரும்

சிவசக்தி தன்புகழ் செப்புகின்றோம்,

இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்

எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே.

5


மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்

வைய மிசைநித்தம் பாடுகின்றோம்,

நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்,

நோக்கங்கள் பெற்றிட வேண்டுமென்றே. 6


ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

ஓம்சக்தி என்றுரை செய்திடுவோம்;

ஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர்

ஒண்மை கொண்டார், உயிர் வண்மை கொண்டார். 7

----------------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


சக்தி விளக்கம்


1.  ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் -- அதை அன்னை எனப்பணிதல் ஆக்கம்;

    சூதில்லை காணுமிந்த நாட்டீா -- மற்றத் தொல்லை மதங்கள்செய்யும் தூக்கம்.

2.  மூலப் பழம்பொருளின் நாட்டம் -- இந்த மூன்று புவியுமதன் ஆட்டம்;

   காலப் பெருங்களத்தின் மீதே -- எங்கள் காளி நடமுலகக் கூட்டம்.

3. காலை இளவெயிலின் காட்சி -- அவள் கண்ணொளி காட்டுகின்ற மாட்சி;

   நீல விசும்பினிடை இரவில் -- சுடர் நேமி யனைத்துமவள் ஆட்சி.

4. நாரண னென்று பழவேதம்  -- சொல்லும் நாயகன் சக்தி திருப்பாதம்;

  சேரத் தவம் புரிந்து பெறுவார் -- இங்குச் செல்வம் அறிவு சிவபோதம்.

5. ஆதி சிவனுடை சக்தி  -- எங்கள் அன்னை யருள்பெறுதல் முக்தி;

  மீதி உயிரிருக்கும் போதே -- அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி

6. பண்டை விதியுடைய தேவி -- வெள்ளை பாரதி யன்னையருள் மேவி,

  கண்ட பொருள் விளக்கும் நூல்கள் -- பல கற்றலில் லாதவனோர் பாவி.

7. மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று:-- அந்த மூலப் பொருள்ஒளியின் குன்று:

  நேர்த்தி திகழும் அந்த ஒளியை -- எந்த நேரமும் போற்று சக்தி என்று.


-------------------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்


[ராகம் -- பூபாளம்] [தாளம் -- சதுச்ர ஏகம்]


கையைச், சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சாதனைகள் யாவினையுங் கூடும் -- கையைச்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும். 1


[முதற் பதிப்பு]: ‘சக்தி தனக்கு’


கண்ணைச், சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சக்தி வழியினைஅது காணும் -- கண்ணைச்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சத்தியமும் நல்லருளும் பூணும். 2


செவி, சக்தி தனக்கே கருவியாக்கு -- சிவ

சக்திசொலும் மொழியது கேட்கும் -- செவி

சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சக்தி திருப் பாடலினை வேட்கும். 3


வாய், சக்தி தனக்கே கருவியாக்கு -- சிவ

சக்தி புகழினையது முழங்கும் -- வாய்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சக்திநெறி யாவினையும் வழங்கும். 4


சிவ, சக்திதனை நாசிநித்தம் முகரும் -- அதைச்

சக்தி தனக்கே கருவியாக்கு -- சிவ

சக்தி திருச் சுவையினை நுகரும் -- சிவ

சக்தி தனக்கே எமது நாக்கு. 5


மெய்யைச், சக்தி தனக்கே கருவியாக்கு -- சிவ

சக்திதருந் திறனதி லேறும் -- மெய்யைச்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சாதலற்ற வழியினைத் தேறும். 6


கண்டம், சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சந்ததமும் நல்லமுதைப் பாடும் -- கண்டம்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சக்தியுடன் என்றும் உற வாடும். 7


தோள், சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

தாரணியும் மேலுலகுந் தாங்கும் -- தோள்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சக்திபெற்று மேருவென ஓங்கும். 8


நெஞ்சம், சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சக்தியுற நித்தம் விரிவாகும் -- நெஞ்சம்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அதைத்

தாக்கவரும் வாளொதுங்கிப் போகும். 9

சிவ, சக்தி தனக்கே எமது வயிறு -- அது

சாம்பரையும் நல்லவுண வாக்கும் -- சிவ

சக்தி தனக்கே எமது வயிறு -- அது

சக்திபெற உடலினைக் காக்கும். 10


இடை, சக்தி தனக்கே கருவியாக்கு -- நல்ல

சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் -- இடை

சக்தி தனக்கே கருவியாக்கு -- நின்றன்

சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும். 11


கால், சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சாடியெழு கடலையும் தாவும் -- கால்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சஞ்சலமில் லாமலெங்கும் மேவும். 12


மனம், சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும் -- மனம்

சக்திதனக்கே கருவியாக்கு -- அது

சாத்துவிகத் தன்மையினைச் சூடும். 13


மனம், சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சக்தியற்ற சிந்தனைகள் தீரும் -- மனம்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சாருநல்ல உறுதியுஞ் சீரும். 14


மனம், சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சக்திசக்தி சக்தியென்று பேசும் -- மனம்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அதில்

சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும். 15


மனம், சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சக்தி நுட்பம் யாவினையும் நாடும் -- மனம்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சக்திசக்தி யென்றுகுதித் தாடும். 16


மனம், சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சக்தியினை எத்திசையும் சேர்க்கும் -- மனம்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

தான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும். 17


[பாட பேதம்]: ‘சஞ்சலமில் லாமலெங்கும் மேவும்.’


-- கவிமணி

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு -- அது

சந்ததமும் சக்திதனைச் சூழும் -- மனம்

சக்தி தனக்கே கருவியாக்கு -- அதில்

சாவுபெறும் தீவினையும் ஊழும். 18


மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு -- எதைத்

தான் விரும்பி னாலும்வந்து சேரும் -- மனம்

சக்தி தனக்கே உரிமையாக்கு -- உடல்

தன்னிலுயர் சக்திவந்து நேரும். 19


மனம், சக்தி தனக்கே கருவியாக்கு -- இந்தத்

தாரணியில் நூறுவய தாகும் -- மனம்

சக்தி தனக்கே கருவியாக்கு -- உன்னைச்

சாரவந்த நோயழிந்து போகும். 20


மனம், சக்தி தனக்கே கருவியாக்கு -- தோள்

சக்திபெற்று நல்லதொழில் செய்யும் -- மனம்

சக்தி தனக்கே கருவியாக்கு -- எங்கும

சக்தியருள் மாரிவந்து பெய்யும். 21


மனம், சக்தி தனக்கே கருவியாக்கு -- சிவ

சக்தி நடை யாவும் நன்கு பழகும் -- மனம்

சக்தி தனக்கே கருவியாக்கு -- முகம்

சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும். 22


மனம், சக்தி தனக்கே கருவியாக்கு -- உயர்

சாத்திரங்கள் யாவுநன்கு தெரியும் -- மனம்

சக்தி தனக்கே கருவியாக்கு -- நல்ல

சத்திய விளக்கு நித்தம் எரியும். 23


சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு -- நல்ல

தாளவகை சந்தவகை காட்டும் -- சித்தம்

சக்தி தனக்கே உரிமையாக்கு -- அதில்

சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும். 24


சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது

சக்தியையெல் லோர்க்குமுணர் வுறுத்தும் -- சித்தம்

சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது

சக்திபுகழ் திக்கனைத்தும் நிறுத்தும். 25


சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது

சக்திசக்தி யென்று குழலூதும்-சித்தம்

சக்தி தனக்கே உரிமையாக்கு -- அதில்

சார்வதில்லை அச்சமுடன் சூதும். 26


சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது

சக்தியென்று வீணைதனில் பேசும் -- சித்தம்

சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது

சக்திபரி மளமிங்கு வீசும். 27

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது

சக்தியென்று தாளமிட்டு முழக்கும் -- சித்தம்

சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது

சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும். 28


சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது

சக்திவந்து கோட்டைகட்டி வாழும் -- சித்தம்

சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது

சக்தியருட் சித்திரத்தில் ஆழும். 29


மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது

சங்கடங்கள் யாவினையும் உடைக்கும்-மதி

சக்தி தனக்கே உடைமையாக்கு -- அங்குச்

சத்தியமும் நல்லறமும் கிடைக்கும். 30


மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது

சாரவருந் தீமைகளை விலக்கும் -- மதி

சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது

சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும். 31


மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது

சக்திசெய்யும் விந்தைகளைத் தேடும் -- மதி

சக்திதனக்கே உடைமையாக்கு -- அது

சக்தியுறை விடங்களை நாடும். 32


மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது

தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீங்கும் -- மதி

சக்தி தனக்கே உடைமையாக்கு -- அதில்

தள்ளிவிடும் பொய்ந்நெறியும் தீங்கும். 33


மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு -- அதில்

சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் -- மதி

சக்தி தனக்கே உடைமையாக்கு -- அதில்

சக்தியொளி நித்தமுநின் றிலகும். 34


மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு -- அதில்

சார்வதில்லை ஐயமெனும் பாம்பு -- மதி

சக்தி தனக்கே உடைமையாக்கு -- அங்கு

தான்முளைக்கும் முக்திவிதைக் காம்பு. 35


மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது

தாரணியி லன்புநிலை நாட்டும் -- மதி

சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது

சர்வசிவ சக்தியினைக் காட்டும். 36


மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது

சக்திதிரு வருளினைச் சேர்க்கும் -- மதி

சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது

தாமதப் பொய்த் தீமைகளைப் பேர்க்கும். 37

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது

சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் -- மதி

சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது

தாக்கவரும் பொய்ப்புலியை ஓட்டும். 38


மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது

சத்தியநல் லிரவியைக் காட்டும் -- மதி

சக்தி தனக்கே அடிமையாக்கு -- அதில்

சாரவரும் புயல்களை வாட்டும். 39


மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது

சக்திவிர தத்தையென்றும், பூணும் -- மதி

சக்திவிர தத்தை யென்றுங் காத்தால்

சக்திதரும் இன்பமும் நல் லூணும். 40


மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு -- தெளி

தந்தமுதப் பொய்கையென ஒளிரும் -- மதி

சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது

சந்ததமும் இன்பமுற மிளிரும். 41

 

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது

தன்னையொரு சக்தியென்று தேரும் -- அகம்

சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது

தாமதமும் ஆணவமும் தீரும். 42


அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது

தன்னையவள் கோயிலென்று காணும்-அகம்

சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது

தன்னையெண்ணித் துன்பமுற நாணும். 43


அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது

சக்தியெனும் கடலிலோர் திவலை -- அகம்

சக்தி தனக்கே உடைமையாக்கு -- சிவ

சக்தியுண்டு நமக்கில்லை கவலை. 44


அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு-அதில்

சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் -- அகம்

சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது

சக்தி திரு மேனியொளி ஜ்வலிக்கும். 45


சிவ, சக்திஎன்றும் வாழிஎன்று பாடு -- சிவ

சக்திசக்தி என்றுகுதித் தாடு -- சிவ

சக்திஎன்றும் வாழிஎன்று பாடு -- சிவ

சக்திசக்தி என்றுவிளை யாடு. 46


----------------------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


சக்தி திருப்புகழ்



சக்திசக்தி சக்தீசக்தீ

 சக்தீ என்றோது

சக்திசக்தி சக்தீஎன்பார் -- சாகார்

 என்றே நின்றோது.


1


சக்திசக்தி என்றேவாழ்தல் சால்பாம்

 நம்மைச் சார்ந்தீரே

சக்திசக்தி என்றீராகில் -சாகா

 உண்மை சேர்ந்தீரே. 2


சக்திசக்தி என்றால் சக்தி -- தானே

 சேரும் கண்டீரே

சக்திசக்தி என்றால் வெற்றி -- தானே

 நேரும் கண்டீரே.

3



[பாட பேதம்]: ‘சக்தி யென்றீராயின்’ என்றேனும், ‘சக்தி யென்றீராகில்’

என்றேனு மிருக்கலாம்.


சக்திசக்தி என்றே செய்தால் -- தானே

 செய்கை நேராகும்

சக்திசக்தி என்றால் அஃது -- தானே

 முக்தி வேராகும்.

4


சக்திசக்தி சக்தீசக்தீ சக்தீ

 என்றே ஆடோமோ?

சக்திசக்தி சக்தீஎன்றே -- தாளங்

 கொட்டிப் பாடோமோ. 5


சக்திசக்தி என்றால்துன்பம் -- தானே

 தீரும் கண்டீரே.

சக்திசக்தி என்றால் இன்பம் -- தானே

 சேரும் கண்டீரே. 6


சக்திசக்தி என்றால்செல்வம் -- தானே

 ஊறும் கண்டீரோ?

சக்திசக்தி என்றால் கல்வி-தானே

 தேறும் கண்டீரோ? 7


சக்திசக்தி சக்தீசக்தீ சக்தீ

 சக்தீ வாழீ நீ.

சக்திசக்தி சக்தீசக்தீ சக்தீ

 சக்தீ வாழீ நீ.


8


சக்திசக்தி வாழீஎன்றால் -- சம்பத்

 தெல்லாம் நேராகும்

சக்திசக்தி என்றால்சக்தி-தாசன்

 என்றே பேராகும்.





10


--------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


மஹாசக்தி பஞ்சகம்



காரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்

  காளிநீ காத்தருள் செய்யே

மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்

  மாரவெம் பேயினை அஞ்சேன்.

இரணமுஞ் சுகமும் பழியுநற் புகழும்

  யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்

சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்

  தாயெனைக் காத்தலுடன் கடனே. 1


எண்ணிலாப் பொருளும் எல்லையில் வெளியும்

  யாவுமாம் நின்றனைப் போற்றி

மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்

  மயங்கிலேன், மனமெனும் பெயர்கொள்

கண்ணிலாப் பேயை எள்ளுவேன், இனியெக்

  காலுமே அமைதியி லிருப்பேன்

தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்

  தாயுனைச் சரண்புகுந் தேனால். 2


நீசருக் கினிதாந் தனத்தினும் மாதர்

  நினைப்பினும் நெறியிலா மாக்கள்

மாசுறு பொய்ந்நட் பதனிலும் பன்னாள்

  மயங்கினேன் அவையினி மதியேன்

தேசுறு நீல நிறத்தினாள் அறிவாய்ச்

  சிந்தையிற் குலவிடு திறத்தாள்

வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்

  விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன். 3


ஐயமுந் திகைப்புந் தொலைந்தன ஆங்கே

  அச்சமுந் தொலைந்தது சினமும்

பொய்யுமென் றினைய புன்மைகளெல்லாம்

  போயின உறுதிநான் கண்டேன்

வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்

  மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்

துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்

  துணையெனத் தொடர்ந்தது கொண்டே. 4


தவத்தினை எளிதாப் புரிந்தனள் யோகத்

  தனிநிலை ஒளியெனப் புரிந்தாள்

சிவத்தினை இனிதாப் புரிந்தனள் மூடச்

  சித்தமும் தெளிவுறச் செய்தாள்

பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம்

  பான்மைகொன் றவள்மயம் புரிந்தாள்

அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்

  அநந்தமா வாழ்கஇங்கவளே. 5



-----------------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


மஹாசக்தி வாழ்த்து




விண்டு ரைக்க அறிய அரியதாய்

  விரிந்தவான வெளியென நின்றனை,

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை,

  அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை,

மண்டலத்தை அணுவணு வாக்கினால்

  வருவதெத்தனை அத்தனை யோசனை

கொண்டதூம்ர அவற்றிடை வைத்தனை

  கோலமே நினைக் காளியென் றேத்துவேன்.










1


நாடு காக்கும் அரசன் தனையந்த

  நாட்டு ளோர் அர சென்றறி வார் எனில்

பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்

  பண்ணு மப்ப னிவனென் றறிந்திடும்;

கோடி யண்டம் இயக்கி யளிக்கும் நின்

  கோலம் ஏழை குறித்திட லாகுமோ?

நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்

  நலங்கள் ஏத்திட நல்லருள் செய்கவே.

2


பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை,

  பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை,

கரிய மேகத் திரளெனச் செல்லுவை,

  காலு மின்னென வந்துயிர் கொல்லுவை,

சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை,

  சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை,

விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,

  வெல்க காளி யெனதம்மை வெல்கவே.

3


வாயு வாகி வெளியை அளந்தனை,

  வாழ்எவ தற்கும் ஊயிர்நிலை ஆயினை,

தேயு வாகி ஒளியருள் செய்குவை,

  செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை,

பாயு மாயிரஞ் சத்திக ளாகியே

  பாரிலுள்ள தொழில்கள் இயற்றுவை,

சாயும் பல்லுயிர் கொல்லுவை, நிற்பன

  தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.

4


நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,

  நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை,

தலத்தின் மீது மலையும் நதிகளும்

  சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை,

குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்,

  கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை,

புலத்தை யிட்டிங் குயிர்கள்செய்தாய் அன்னே,

  போற்றி, போற்றி, நினதருள் போற்றியே.

5


சித்த சாகரஞ் செய்தனை, ஆங்கதிற்

  செய்த கர்மப் பயனெனப் பல்கினை,

தத்து கின்ற திரையுஞ் சுழிகளும்

  தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்

சுத்த மோனப் பகுதியும் வெண்பனி

  சூழ்ந்த பாகமும் சுட்டவெந் நீருமென்று

ஒத்த நீர்கடல் போலப் பலவகை

  உள்ள மென்னுங் கடலில் அமைத்தனை.

6



----------------------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


சிவ சக்தி புகழ்


[ராகம் -- தன்யாசி] [தாளம் -- சதுஸ்ர ஏகம்]



ஓம் சக்திசக்தி சக்தியென்று சொல்லு -- கெட்ட

சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு

சக்திசக்தி சக்தியென்று சொல்லி -- அவள்

சந்நிதியி லேதொழுது நில்லு.




1


ஓம் சக்திமிசை பாடல்பல பாடு -- ஓம்

சக்திசக்தி என்றுதாளம் போடு

சக்திதருஞ் செய்கைநிலந் தனிலே -- சிவ

சக்திவெறி கொண்டுகளித் தாடு. 2


ஓம் சக்திதனையே சரணங் கொள்ளு -- என்றும்

சாவினுக்கொ ரச்சமில்லை தள்ளு

சக்திபுக ழாமமுதை அள்ளு -- மதி

தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளு.

3


ஓம் சக்திசெய்யும் புதுமைகள் பேசு -- நல்ல

சக்தியற்ற பேடிகளை ஏசு

சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி -- அவள்

தந்திடுநற் குங்குமத்தைப் பூசு.

4


ஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை -- இதைச்

சார்ந்துநிற்ப தேநமக்கொ ருய்கை

சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை -- அதில்

தண்ணமுத மாரிநித்தம் பெய்கை.

5


ஓம், சக்திசக்தி சக்தியென்று நாட்டு -- சிவ

சக்தியருள் பூமிதனில் காட்டு

சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் -- புவிச்

சாதிகளெல் லாமதனைக் கேட்டு.

6


ஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு -- அவள்

தந்திரமெல் லாமுலகில் வழங்கு

சக்தியருள் கூடிவிடு மாயின் -- உயிர்

சந்ததமும் வாழுநல்ல கிழங்கு.

7


ஓம் சக்திசெயுந் தொழில்களை எண்ணு -- நித்தம்

சக்தியுள்ள தொழில்பல பண்ணு

சக்திதனை யேயிழந்து விட்டால் -- இங்கு

சாவினையும் நோவினையும் உண்ணு.

8


ஓம் சக்தியரு ளாலுலகில் ஏறு -- ஒரு

சங்கடம் வந்தாலிரண்டு கூறு

சக்திசில சோதனைகள் செய்தால் -- அவள்

தண்ணருளென் றேமனது தேறு.

9


ஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து -- சிவ

சக்திதனையே அகத்தில் ஆழ்த்து

சக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய் -- சிவ

சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து.


10



--------------------------------------------------------------



தோத்திரப் பாடல்கள்


ஊழிக் கூத்து



வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட -- வெறும்

வெளியி லிரத்தக் களியோடு பூதம் பாடப் -- பாட்டின்

அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் -- களித்

தாடுங் காளீ, சாமுண்டீ; கங்காளீ!

அன்னை, அன்னை,

ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை. 1


ஐந்துறுதம் சிந்திப் போயொன் றாகப் -- பின்னர்

அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக -- அங்கே

முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் -- தோடே

முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்,

அன்னை, அன்னை,

ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை. 2


பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் -- சலனம்

பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய -- அங்கே

ஊழாம் பேய்தான் “ஓஹோ ஹோ” வென்றலைய, -- வெறித்

துறுமித் திரிவாய், செருவெங் கூத்தே புரிவாய்,

அன்னை, அன்னை,

ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.

3


சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் -- சட்டச்

சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி -- அங்கே

எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் -- தானே

எரியுங் கோலங் கண்டேசாகும் காலம்

அன்னை, அன்னை,

ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.

4


காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும் -- அங்கே

கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்

கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் -- கையைக்

கொஞ்சித் தொடுவாய், ஆனந்தக்கூத் திடுவாய்,

அன்னை, அன்னை,

ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.


5



---------------------------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


மஹாசக்தி



சந்திர னொளியில் அவளைக் கண்டேன்

சரணமென்று புகுந்து கொண்டேன்

இந்திரி யங்களை வென்று விட்டேன்

எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்,


(சந்) 1


[பாட பேதம்]: ‘சந்திரிகையி லவளை கண்டேன்’


-- 1910 ஆம் வருடப் பதிப்பு.


பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்

பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்

துயரி லாதெனைச் செய்து விட்டாள்

துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.

(சந்) 2


மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்

வீசி நிற்கும் வளியைச் செய்தாள்

வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்

வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள். (சந்) 3

----------------------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


மஹாசக்திக்கு விண்ணப்பம்



மோகத்தைக் கொன்றுவிடு -- அல்லா லென்றன்

  மூச்சை நிறுத்திவிடு

தேகத்தைச் சாய்த்துவிடு -- அல்லாலதில்

  சிந்தனை மாய்த்துவிடு

யோகத் திருத்திவிடு -- அல்லா லென்றன்

  ஊனைச் சிதைத்துவிடு

ஏகத் திருந்துலகம் -- இங்குள்ளன

  யாவையும் செய்பவளே! 1


பந்தத்தை நீக்கிவிடு -- அல்லா லுயிர்ப்

  பாரத்தைப் போக்கிவிடு்

சிந்தை தெளிவாக்கு -- அல்லாலிதைச்

  செத்த உடலாக்கு

இந்தப் பதர்களையே -- நெல்லாமென

  எண்ணி இருப்பேனோ

எந்தப் பொருளிலுமே -- உள்ளேநின்று

  இயங்கி யிருப்பவளே. 2


கள்ளம் உருகாதோ -- அம்மா

  பக்திக் கண்ணீர் பெருகாதோ?

உள்ளம் குளிராதோ -- பொய்யாணவ

  ஊனம் ஒழியாதோ?

வெள்ளக் கருணையிலே -- இந்நாய் சிறு

  வேட்கை தவிராதோ?

விள்ளற் கரியவளே -- அனைத்திலும்

  மேவி யிருப்பவளே!

3


[பாட பேதம்]:

1. ‘யாவையும் செய்தவளே’

2. ‘உள்ளத் தெளியாதோ’

-- 1910 ஆம் வருட பதிப்பு.


----------------------------------------------------------

தோத்திரப் பாடல்கள்


வெற்றி



எடுத்த காரியம் யாவினும் வெற்றி

எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே

விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி

வேண்டி னேனுக் கருளினள் காளி;

தடுத்து நிற்பது தெய்வத மேனும்

சாரு மானுட மாயினும் அஃதைப்

படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி

பாரில் வெற்றி எனக்குறு மாறே.


1


எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி

எங்கும் வெற்றி எதனினும் வெற்றி

கண்ணு மாருயி ரும்மென நின்றாள்

காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்

மண்ணும் காற்றும் புனலும் அனலும்

வானும் வந்து வணங்கிநில் லாவோ?

விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ

வெல்க காளி பதங்களென் பார்க்கே?

2



[பாட பேதம்]: 1910 ஆம் வருடத்தில் வெளிவந்த பதிப்பில் மூன்றாம் பாடலின் முதலிரண்டடிகள் பின்வருமாறு காணப் படுகின்றன:


‘கள்ள முருகாதோ -- அம்மா பக்திக் கண்ணீர் பெருகாதோ?

உள்ளந் தெளியாதோ -- பொய்யாணவ ஊன மொழியாதோ?’


------------------------------------------------------------------------------------------------


தோத்திரப் பாடல்கள்


காளிக்குச் சமர்ப்பணம்


இந்தமெய்யும் கரணமும் பொறியும்

   இருபத் தேழு வருடங்கள் காத்தனன்

வந்தனம்அடி பேரருள் அன்னாய்!

   வைரவீ! திறற் சாமுண்டி! காளி!

சிந்தனை தெளிந்தேனினி யுன்றன்

   திருவருட்கென அர்ப்பணஞ் செய்தேன்

வந்திருந்து பலபய னாகும

  வகைதெரிந்துகொள் வாழி யடி நீ.


-------------------------------------------------------------------

தோத்திரப் பாடல்கள்


மஹாசக்திக்கு விண்ணப்பம்



எண்ணிய முடிதல் வேண்டும்

    நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

    தெளிந்த நல்லறிவு வேண்டும்

பண்ணிய பாவ மெல்லாம்

    பரிதிமுன் பனியே போல

நண்ணிய நின்முன் இங்கு

    நசித்திடல் வேண்டும் அன்னாய்.


[பாட பேதம்]

:1 ‘காத்தேன்’

2‘சிந்தனை தெளிந்தே னிதையின்றி’

3 ‘வகை புரிந்துகொள்’

-- 1910 ஆம் வருடப் பதிப்பு.

---------------------------------------------------------------

தோத்திரப் பாடல்கள்


   பூலோக குமாரி 


           பல்லவி


   பூலோக குமாரி ஹே அம்ருத நாரி


          அனுபல்லவி


   ஆலோக ஸ்ருங்காரி அம்ருத கலசகுச பாரே

   கால பயகுடாரி காமவாரி கனக லதா ரூப கர்வதிமிராரே.


          சரணங்கள்


   பாலே ரஸ ஜாலே

   பகவதி ப்ரஸீத காலே

   நீல ரத்னமய நேத்ர விசாலே

   நித்ய யுவதி பத நீரஜமாலே-

   லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ

   நிரந்தரே நிகில லோகேசாநி

   நிருபம ஸீந்தரி நித்யகல்யாணி

   நிஜம்மாம் குருஹே மன்மத ராணி.


---------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்


மாயையைப் பழித்தல்


[ராகம் -- காம்போதி] [தாளம் -- ஆதி]


உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ

   மாயையே -- மனத்

திண்மையுள் ளாரைநீ செய்வது மொன்றுண்டோ --

   மாயையே. 1


எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்

   மாயையே -- நீ

சித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ --

   மாயையே. 2


என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்கெட்ட

   மாயையே -- நான்

உன்னைக் கெடுப்ப துறுதிஎயன் றேயுணர்

   மாயையே. 3


சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு

   மாயையே -- இந்தத்

தேகம் பொய் யென்றுணர் தீரரை யென்செய்வாய் --

   மாயையே. 4


இருமை யழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப

   மாயையே -- தெளிந்

தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ --

   மாயையே. 5


நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ

   மாயையே -- சிங்கம்

நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை --

   மாயையே. 6


என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட வல்லேன்

   மாயையே-இனி

உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்வராது காண்-

   மாயையே. 7


யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன்

   மாயையே -- உன்றன்

போர்க்கஞ்சு வேனோ பொடியாக்கு வேன் உன்னை --

   மாயையே. 8



-------------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்


அச்சமில்லை


[பண்டாரப் பாட்டு]


அச்சமில்லை அச்சமில்லை

    அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம்

   எதிர்த்துநின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை

   அச்சமென்ப தில்லையே.

துச்சமாக எண்ணிநம்மைத்

   தூறுசெய்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை

   அச்சமென்ப தில்லையே.

பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை

   பெற்றுவிட்ட போதிலும்,

அச்சமில்லை யச்சமில்லை

   அச்சமென்பத் தில்லையே.

இச்சைகொண்ட பொருளெலாம்

   இழந்துவிட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை

   அச்சமென்ப தில்லையே.

1


கச்சணிந்த கொங்கை மாதர்

   கண்கள் வீசு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை

   அச்சமென்ப தில்லையே.

நச்சைவாயி லேகொணர்ந்து

   நண் பரூட்டு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை

   அச்சமென்ப தில்லையே.

பச்சையூ னியைந்தவேற்

   படைகள்வந்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை

   அச்சமென்ப தில்லையே.

உச்சிமீது வானிடிந்து

   வீழுகின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை

   அச்சமென்ப தில்லையே. 2


--------------------------------------------------------------------.


வேதாந்தப் பாடல்கள்

சங்கு


செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திட லாமென்றே எண்ணியிருப்பார்

பித்த மனிதர் அவர்சொலுஞ் சாத்திரம்

பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்.

1


இத்தரை மீதினி லேயிந்த நாளினில்

இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்

சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்

தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்.

2


பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு

புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே

ஐயுற லின்றிக் களித்திருப் பாரவர்

ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்.

3


மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்

மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே

செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்

சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்.

4



------------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்


அறிவே தெய்வம்

கண்ணிகள்



ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி

  அலையும் அறிவிலிகள் -- பால்

லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்

  டாமெனல் கேளீரோ? 1


மாடனைக் காடனை வேடனைப் போற்றி

  மயங்கும் மதியிலிகாள் -- எத

னூடும் நின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்

  றோதி யறியீரோ? 2


சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்

  சுருதிகள் கேளீரோ? -- பல

பித்த மதங்களி லேதடு மாறிப்

  பெருமை யழிவீரோ? 3


வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று

  வேதம் புகன்றிடுமே -- ஆங்கோர்

வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்

  வேத மறியாதே. 4


நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று

  நான்மறை கூறிடுமே -- ஆங்கோர்

நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்

  நான்மறை கண்டிலதே. 5


போந்த நிலைகள் பலவும் பராசக்தி

  பூணு நிலையாமே -- உப

சாந்த நிலையே வேதாந்த நிலையென்று

  சான்றவர் கண்டனரே. 6


கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று

  காட்டும் மறைகளெலாம் -- நீவிர்

அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு

  அவங்கள் புரிவீரோ? 7


உள்ள தனைத்திலு முள்ளொளி யாகி

  யொளிர்ந்திடு மான்மாவே -- இங்கு

கொள்ளற் கரிய பிரமமென் றேமறை

  கூவுதல் கேளீரோ? 8


மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து

  வெறுங்க தைகள்சேர்த்துப் -- பல

கள்ள மதங்கள் பரப்புதற் கோர்முறை

  காட்டவும் வல்லீரோ? 9


ஒன்றுபிரம முளதுண்மை யஃதுன்

  உணர்வெனும் வேதமெலாம் -- என்றும்

ஒன்றுபிரம முளதுண்மை யஃது

  உணர்வெனக் கொள்வாயே. 10



---------------------------------------------------------------------------------------------------

வேதாந்தப் பாடல்கள்

அழகுத் தெய்வம்


மங்கியதொர் நிலவினிலே கனவிலிது கண்டேன்

வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை

பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்

புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்

துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து

தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.

அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!

அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன். 1


யோகந்தான் சிறந்ததுவோ தவம்பெரிதோ என்றேன்;

யோகமேதவம் தவமே யோகமென உரைத்தாள்.

ஏகமோ பொருளன்றி இரண்டாமோ என்றேன்;

இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள்.

தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ

தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ என்றேன்

வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்.

விருப்புடனே பெய்குவதூ வேறாமோ என்றாள். 2


காலத்தின்விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்

காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்.

ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்

நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்

ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன்

எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண் என்றாள்.

மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்

முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன். 3

-------------------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்


ஜீவன்முக்தி


[ ராகம் -- கமாஸ்] [தாளம்-ஆதி]


பல்லவி


ஜயமுண்டு பயமில்லை மனமே-இந்த

ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு.


(ஜய)


அனுபல்லவி


பயனுண்டு பக்தியினாலே -- நெஞ்சிற்

பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை.


(ஜய)


சரணங்கள்


புயமுண்டு குன்றத்தைப் போலே -- சக்தி

பொற்பாத முண்டு அதன் மேலே

நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;

நெறியுண்டு; குறியுண்டு; குலசக்தி வெறியுண்டு. (ஜய) 1


மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் -- தெய்வ

வலியுண்டு தீமையைப் பேர்க்கும்:

விதியுண்டு; தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை;

விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய) 2


அலைபட்ட கடலுக்கு மேலே -- சக்தி

அருளென்னுந் தோணியினாலே

தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்

துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு


(ஜய) 3


--------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

ஜய பேரிகை



பல்லவி

ஜய பேரிகை கொட்டடா -- கொட்டட

ஜய பேரிகை கொட்டடா! (ஜய)


   


சரணங்கள்


பயமெனும் பேய்தனை யடித்தோம் -- பொய்ம்மைப்

பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்

வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்.


(ஜய பேரிகை) 1


இரவியி னொளியிடைக் குளித்தோம்-ஒளி

இன்னமு தினையுண்டு களித்தோம்

கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்

காலன் நடுநடுங்க விழித்தோம். (ஜய பேரிகை) 2


காக்கை, குருவி எங்கள் ஜாதி -- நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;

நோக்க நோக்கக் களியாட்டம். (ஜய பேரிகை) 3


----------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

அல்லா


பல்லவி

அல்லா, அல்லா, அல்லா!

சரணங்கள்


பல்லாயிரம் பல்லாயிரம் கோடிகோடி யண்டங்கள்

எல்லாத் திசையிலுமோ ரெல்லையில்லா வெளிவானிலே

நில்லாது சுழன்றோட நியமஞ்செய்தருள் நாயகன்

சொல்லாலும் மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி!

(அல்லா, அல்லா, அல்லா,!)

1


கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்

பொல்லாதவ ராயினும்தவ மில்லாதவ ராயினும்

நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினுமி

எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச் செய்பவன்


(அல்லா, அல்லா, அல்லா,!)

2



---------------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

யேசு கிறிஸ்து


[தீய ஒழுக்கத்தில் நின்ற மேரி மக்தலேன் என்பாள் யேசு கிறிஸ்துவை அடைந்து, தனது ஒழுக்கத்திற்காகப் பரிதபித்து, தன்னைக் கடையேற்ற வேண்டுமென்று வேண்டினாள். யேசுவும் அவளுக்கு அருள் புரிந்தார். யேசு புதைக்கப்பட்ட மூன்றாம்நாள் அவர் உடம்புடன் எழுந்து விண்ணேகினதை மேரி மக்தலேன் கண்ணால் கண்டு பிறருக் கறிவித்ததாய்க் கிறிஸ்து புராணம் கூறுகிறது. இக் கதையையே இங்கு விளக்கியிருக்கிறது.]


 


?ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்,

  எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;

நேசமா மரியாமக்த லேநா

  நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.?

தேசத் தீர்! இதன் உட்பொருள் கேளீர்:

  தேவர் வந்து நமக்குட் புகுந்தே

நாசமின்றி நமை நித்தங் காப்பார்,

  நம்அகந்தையை நாம்கொன்று விட்டால். 1


அன்புகாண் மரியா மக்த லேநா,

  ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;

முன்பு தீமை வடிவினைக் கொன்றால்

  மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;

பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே

  போற்று வாள் அந்த நல்லுயிர் தன்னை

அன்பெனும் மரியா மக்த லேநார்

  ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே. 2


உண்மை யென்ற சிலுவையிற் கட்டி

  உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்,

வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து

  வான மேனியில் அங்கு விளங்கும்

பெண்மைகாண் மரியா மக்த லேநா,

  பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.

நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்

  நொடியி லிஃது பயின்றிட லாகும். 3



--------------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

கற்பனையூர்


[ஜான் ஸ்கர் என்ற ஆங்கிலப் புலவன் ?நக்ஷத்ரது தன்? என்ற பத்திரிகையில் பிரசுரித்த ?தெ டவுன் ஆப் லெட்ஸ் ப்ரிமெண்ட்? என்ற பாட்டின் மொழிபெயர்ப்பு.]


குறிப்பு: -- இப்பாடலின் பொருள்: கற்பனை நகர மென்பது சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்குக் குறிப்பிடுகிறது. ?யோவான்? என்பது் குமாரதேவனுடைய பெயர். ?அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலைபெற்று, மனிதன் மோக்ஷமடைவதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தை அடைய வேண்டும்? என்று யேசு கிறிஸ்து நாதர் சொல்லி யிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது. கவலைகளை முற்றும் துறந்துவிட்டு உலகத்தை வெறுமே லீலையாக கருதினாலன்றி மோக்ஷம் எய்தப்படாது.


கற்பனை யூரென்ற நகருண்டாம் -- அங்குக்

கந்தர்வர் விளையாடு வராம்.

சொப்பன நாடென்ற சுடர்நாடு -- அங்குச்

சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை. 1


திருமணை யிதுகொள்ளைப் போர்க்கப்பல் -- இது

ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்.

வெருவுற மாய்வார் பலர்கடலில் -- நாம்

மீளவும் நம்மூர் திரும்பு முன்னே. 2


அந்நகர் தனிலோர் இளவரசன் -- நம்மை

அன்பொடு கண்டுரை செய்திடுவான்;

மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே -- அவன்

மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3


எக்கால மும்பெரு மகிழ்ச்சி யங்கே

எவ்வகைக் கவலையும் போருமில்லை;

பக்குவத் தேயிலை நீர் குடிப்போம் -- அங்குப்

பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4


இன்னமு திற்கது நேராகும் -- நம்மை

யோவான் விடுவிக்க வருமளவும்

நன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம் -- நம்மை

நலித்திடும் பேயங்கு வாராதே.


5


குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண் -- அங்குக்

கோல்பந்து யாவிற்கு முயிருண்டாம்

அழகிய பொன்முடி யரசிகளாம் -- அன்றி

அரசிளங் குமரிகள் பொம்மையெலாம்,


6


செந்தோ லசுரனைக் கொன்றிடவே -- அங்குச்

சிறுவிற கெல்லாம் சுடர்மணிவாள்

சந்தோ ஷத்துடன் செங்கலையும் -- அட்டைத்

தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7


கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே -- வழி

காண்ப திலாவகை செய்திடுவோம் -- ஓ!

பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே! -- நீர்

பின்னுமந் நிலைபெற வேண்டீரோ?


8


குழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம் -- அந்தக்

கோலநன் னாட்டிடைக் காண்பீரே;

இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம் -- நீர்

ஏகுதிர் கற்பனை நகரினுக்கே.


9



---------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

நந்தலாலா

[ ராகம் -- யதுகுல காம்போதி ] [ தாளம் -- ஆதி ]



காக்கைச் சிறகினிலே

   நந்தலாலா -- நின்றன்

கரியநிறந் தோன்றுதையே

   நந்தலாலா; 1


பார்க்கும் மரங்களெல்லாம்

   நந்தலாலா -- நின்றன்

பச்சைநிறந் தோன்றுதையே

   நந்தலாலா;


2


கேட்கு மொலியிலெல்லாம்

   நந்தலாலா -- நின்றன்

கீத மிசைக்குதடா

   நந்தலாலா; 3


தீக்குள் விரலைவைத்தால்

   நந்தலாலா -- நின்னைத்

தீண்டுமின்பந் தோன்றுதடா

   நந்தலாலா.


4



---------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்


சொல்

[சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.]


தேவர் வருகவென்று சொல்வதோ? -- ஒரு

செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்

ஆவ லறிந்துவரு வீர்கொலோ? -- உம்மை

யன்றி யொருபுகலும் இல்லையே. 1


‘ஓம்’ என் றுரைத்துவிடிற் போதுமோ? -- அதில்

உண்மைப் பொருளறிய லாகுமோ?

தீமை யனைத்துமிறந் தேகுமோ? -- என்றன்

சித்தம் தெளிவுநிலை கூடுமோ? 2


‘உண்மை ஒளிர்க’ என்று பாடவோ? -- அதில்

உங்கள் அருள் பொருந்தக் கூடுமோ?

வண்மை உடையதொரு சொல்லினால் -- உங்கள்

வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம். 3


“தீயை அகத்தினிடை மூட்டுவோம்” -- என்று

செப்பும் மொழிவலிய தாகுமோ?

ஈயைக் கருடநிலை யேற்றுவீர் -- எம்மை

என்றுந் துயரமின்றி வாழ்த்துவீர். 4


வான மழைபொழிதல் போலவே -- நித்தம்

வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்

கானை அழித்துமனை கட்டுவீர் -- துன்பக்

கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர். 5


விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்கு

வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்

தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் -- நல்ல

தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர். 6


மின்ன லனையதிறல் ஓங்குமே -- உயிர்

வெள்ளம் கரையடங்கிப் பாயுமே

தின்னும் பொருளமுதம் ஆகுமே -- இங்குச்

செய்கை யதனில் வெற்றி யேறுமே. 7


தெய்வக் கனல்விளைந்து காக்குமே -- நம்மைச்

சேரும் இருளழியத் தாக்குமே.

கைவைத் ததுபசும்பொன் ஆகுமே -- பின்பு

காலன் பயமொழிந்து போகுமே. 8


‘வலிமை’ வலிமை என்று பாடுவோம் -- என்றும்

வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம்

கலியைப் பிளந்திடக்கை யோங்கினோம் -- நெஞ்சில்

கவலை இருளனைத்தும் நீங்கினோம். 9


‘அமிழ்தம் அமிழ்தம்’ என்று கூவுவோம் -- நித்தம்

அனலைப் பணிந்துமலர் தூவுவோம்

தமிழில் பழமறையைப் பாடுவோம் -- என்றும்

தலைமை பெருமை புகழ் கூடுவோம். 10


----------------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

சூர்ய ஸ்தோமம் -- ஞானபாநு


திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல் லறிவு, வீரம்,

மருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்

வருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்

பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு. 1


கவலைகள் சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்,

அவல்மா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,

இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேயாம்.

நவமுறு ஞான பாநு நண்ணுக; தொலைக பேய்கள். 2


அனைத்தையும் தேவர்க்காக்கி, அறத்தொழில் செய்யும் மேலோர்

மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;

தினத்தொளி ஞானங் கண்டீர்; இரண்டுமே சேர்ந்தால் வானோர்

இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம். 3


பண்ணிய முயற்சி யெல்லாம் பயனுற வோங்கும் ஆங்கே

எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;

திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்

நண்ணிடு ஞான பாநு அதனை நாம் நன்கு போற்றின். 4



------------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

ஒளியும் இருளும்


வானமெங்கும் பரிதியின் சோதி;

  மலைகள் மீதும் பரிதியின் சோதி;

தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே

  தரையின் மீதும் தருக்களின் மீதும்

கானகத்திலும் பற்பல ஆற்றின்

  கரைகள் மீதும் பரிதியின் சோதி;

மானவன்றன் உளத்தினில் மட்டும்

  வந்து நிற்கும் இருளிது வென்னே! 1


சோதி என்னும் கரையற்ற வெள்ளம்,

  தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,

சோதி என்னும் பெருங்கடல், சோதிச்

  சூறை, மாசறு சோதி யனந்தம்,

சோதி என்னும் நிறைவிஃ துலகைச்

  சூழ்ந்து நிற்ப, ஒருதனி நெஞ்சம்

சோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்

  குமைந்து சோரும் கொடுமையி தென்னே. 2


தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,

  சேர்ந்து புள்ளினம் வாழ்த்திடும் சோதி,

காம முற்று நிலத்தொடு நீரும்

  காற்றும் நன்கு தழுவி நகைத்தே

தாமயங்கிநல் லின்புறுஞ் சோதி,

  தரணி முற்றும் ததும்பி யிருப்ப,

தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்

  சிறிய நெஞ்சந் தியங்குவ தென்னே! 3


நீர்ச் சுனைக்கணம் மின்னுற் றிலக,

  நெடிய குன்றம் நகைத்தொழில் கொள்ள,

கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்,

  கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,

தேர்ச்சி கொண்டுபல் சாத்திரங் கற்றும்

  தெவிட்டொ ணாதநல் லின்பக் கருவாம்

வேர்ச்சுடர் பரமாண் பொருள் கேட்டும்

  மெலிவோர் நெஞ்சிடை மேவுதல் என்னே! 4



---------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

கடமை


கடமை புரிவாரின்புறுவார்

என்னும் பண்டைக் கதை பேணோம்;

கடமை யறியோம் தொழிலறியோம்;

கட்டென் பதனை வெட்டென்போம்;

மடமை, சிறுமை, துன்பம் பொய்

வருத்தம், நோவு, மற்றிவை போல்;

கடமை நினைவுந் தொலைத் திங்கு

களியுற் றென்றும் வாழ்குவமே.


--------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

விடுதலை (1)


இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்

இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்

அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்

ஒளடத மூலிகை பூண்டுபுல் யாவையும்

எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

1

  

வேறு


மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்

வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர்பாய்ச் சாவிடினும்

வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்

வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே?

யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்

என்மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;

உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்.


2


-----------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்


விடுதலை (2)

[ராகம்-நாட்டை]

பல்லவி


வேண்டுமடி எப்போதும் விடுதலை, அம்மா!


சரணங்கள்


தூண்டு மின்ப வாடைவீசு

   துய்யதேன் கடல்

சூழநின்ற தீவிலங்கு

   சோதி வானவர்

ஈண்டு நமது தோழராகி

   எம்மோ டமுதமுண்டுகுலவ

நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய

  நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ      (வேண்டுமடி) 1


விருத்தி ராதி தானவர்க்கு

   மெலிவ தின்றியே

விண்ணு மண்ணும் வந்து பணிய

   மேன்மை துன்றியே

பொருத்த முறநல் வேத மோர்ந்து

  பொய்ம்மை தீர, மெய்ம்மை நேர

வருத்த மழிய வறுமை யொழிய

  வையம் முழுதும் வண்மை பொழிய    (வேண்டுமடி) 2


பண்ணில் இனிய பாடலோடு

   பாயு மொளியெலாம்

பாரில் எம்மை உரிமைகொண்டு

  பற்றி நிற்கவே

நண்ணிய மரர் வெற்றி கூற

  நமது பெண்கள் அமரர் கொள்ள

வண்ணமினிய தேவ மகளிர்

  மருவ நாமும் உவகைதுள்ள                  


  (வேண்டுமடி) 3



--------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

விடுதலை -- சிட்டுக்குருவி

பல்லவி

விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்

சிட்டுக் குருவியைப் போலே.


சரணங்கள்


எட்டுத் திசையும் பறந்து திரிகுவை

ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை

மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்

வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு) 1


பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்

பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு

முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி

முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு) 2


முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்

முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு

மற்றப் பொழுது கதைசொல்லித் ங்கிப்பின்

வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று


(விட்டு)


3



----------------------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

விடுதலை வெண்பா


சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து

பக்தியிற் பாடிப் பலகாலும் -- முக்திநிலை

காண்போம் அதனாற் கவலைப் பிணிதீர்ந்து

பூண்போம் அமரப் பொறி. 1


பொறிசிந்தும் வெங்கனல் போற் பொய்தீர்ந்து தெய்வ

வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம் -- நெறிகொடண்

வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை

ஐயமெலாந் தீர்ந்த தறிவு. 2



[பாட பேதம்]: ''பீடையிலாத வோர்''


-- கவிமணி


அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்

வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் -- குறிகண்டு

செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்

வெல்வயிரச் சீர்மிகுந்த வேல். 3


வேலைப் பணிந்தால் விடுதலையாம்; வேல்முருகன்

காலைப் பணிந்தாற் கவலைபோம் -- மேலறி்வு

தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று

சொன்னால் அதுவே சுகம். 4


சுகத்தினை நான்வேண்டித் தொழுதேன்; எப்போதும்

அகத்தினிலே துன்புற் றழுதேன் -- யுகத்தினிலோர்

மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி

ஆறுதலைத் தந்தாள் அவள் 5


-------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

மனப் பெண்


மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!

ஒன்றையே பற்றி யூச லாடுவாய்

அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்

நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்

விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்

5


தொட்டதை மீள மீளவும் தொடுவாய்

புதியது காணிற் புலனழிந் திடுவாய்

புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்

அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்

பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்

10


பழமையே யன்றிப் பார்மிசை யேதும்

புதுமை காணோமெனப் பொருமுவாய், சீச்சீ!

பிணத்தினை விரும்புங் காக்கையே போல

அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய

இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்.

15


அங்ஙனே

என்னிடத் தென்று மாறுத லில்லா

அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,

கண்ணினோர் கண்ணாய் காதின் காதாய்ப்

புலன்புலப் படுத்தும் புலனா யென்னை


20


உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்,

இன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,

இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்,

இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்,

இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,


25


தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,

தன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக்

காணவே வருந்துவாய், காணெனிற் காணாய்,

சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,

பொதுநிலை அறியாய், பொருளையுங் காணாய்,


30


மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!

நின்னோடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;

இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே

விரும்புவன்; நின்னை மேம்படுத் திடவே

முயற்சிகள் புரிவேன்; முத்தியுந் தேடுவேன்;


35


உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட

சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி

உன்றனக் கின்ப ஓங்கிடச் செய்வேன்.


38


---------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்


நெஞ்சொடு சொல்வது


இன்னுமொரு முறைசொல்வேன், பேதை, நெஞ்சே,

எதற்குமினி உலைவதிலே பயனொன் றில்லை;

முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;

முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;

மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே

வையகத்தில் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்;

பின்னையொரு கவலையுமிங் கில்லை நாளும்

பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய். 1


நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி

நினைத்தபயன் காண்பதவள் செய்கை யன்றோ?

மனமார உண்மையினைப் புரட்ட லாமோ?

மஹாசக்தி செய்தநன்றி மறக்கலாமோ?

எனையாளும் மாதேவி, வீரர் தேவி

இமையவருந் தொழுந்தேவி, எல்லைத் தேவி,

மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி

மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே. 2


சக்தியென்று புகழ்ந்திடுவோம், முருகன் என்போம்,

சங்கரனென் றுரைத்திடுவோம், கண்ணன் என்போம்,

நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி,

நினக்குள்ள குறைகளெலாந் தீர்க்கச் சொல்லி,

பத்தியினாற் பெருமையெலாம் கொடுக்கச் சொல்லி,

பசிபிணிக ளில்லாமற் காக்கச் சொல்லி,

உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,

உலகளந்த நாயகிதாள் உரைப்பாய், நெஞ்சே. 3


?செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்,

சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்,

கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்,

கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,

தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்,

துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே

நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்,

நமோநமஓம் சக்தி? யென நவிலாய் நெஞ்சே. 4


பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்;

பயனன்றி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!

கேட்டது நீ பெற்றிடுவாய், ஐய மில்லை;

கேடில்லை, தெய்வமுண்டு, வெற்றி யுண்டு,

மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதி சக்தி

வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி,

நாட்டினிலே சனகனைப்போல் நமையும் செய்தாள்;

நமோநமஓம் சக்தியென நவிலாய் நெஞ்சே.


5



------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

மனமே

கண்ணன் திருவடி

எண்ணுக மனமே

திண்ணம் அழியா

வண்ணந் தருமே. 1


தருமே நிதியும்

பெருமை புகழும்

கருமா மேனிப்

பெருமா னிங்கே. 2


இங்கே யமரர்

சங்கந் தோன்றும்

மங்கும் தீமை

பொங்கும் நலமே. 3


நலமே நாடிற்

புலவீர் பாடீர்

நிலமா மகளின்

தலைவன் புகழே. 4


புகழ்வீர் கண்ணன்

தகைசே ரமரர்

தொகையோ டசுரப்

பகைதீர்ப் பதையே. 5


தீர்ப்பான் இருளைப்

பேர்ப்பான் கலியை

ஆர்ப்பா ரமரர்

பார்ப்பார் தவமே. 6


தவறா துணர்வீர்

புவியீர் மாலும்

சிவனும் வானோர்

எவரும் ஒன்றே. 7


ஒன்றே பலவாய்

நின்றோர் சக்தி

என்றுந் திகழும்

குன்றா வொளியே. 8



------------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

மனத்திற்குக் கட்டளை


பேயா யுழலுஞ் சிறு மனமே

   பேணா யென்சொல் இன்றுமுதல்

நீயா யொன்றும் நாடாதே

   நினது தலைவன் யானேகாண்

தாயாம் சக்தி தாளினிலும்

   தரும மெனயான் குறிப்பதிலும்

ஓயா தேநின் றுழைத்திடுவாய்

   உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.


[பாட பேதம்]:

'பேயா விழலுஞ்'

'நீயா ஒன்றை'

'ஓயா தேநின் றுழைத்திடு நீ'

-- 1910 ஆம் வருடப் பதிப்பு


------------------------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

மனத்திற்கு

சென்றதினி மீளாது, மூடரே நீர்

எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில்வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்:

தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.


--------------------------------------------------------------------

வேதாந்தப் பாடல்கள்



பகைவனுக் கருள்வாய்

    


பகைவனுக் கருள்வாய் -- நன்னெஞ்சே

பகைவனுக் கருள்வாய்.


புகைநடுவினில் தீயிருப்பதைப்

பூமியிற் கண்டோமே -- நன்னெஞ்சே

                         பூமியிற் கண்டோமே.

பகை நடுவினில் அன்புரு வானநம்

பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே

                         பரமன் வாழ்கின்றான். (பகைவனுக்) 1

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்

செய்தி யறியாயோ -- நன்னெஞ்சே

குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்

கொடி வளராதோ? -- நன்னெஞ்சே (பகைவனுக்) 2

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்

உள்ளம் நிறைவாமோ? -- நன்னெஞ்சே

தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்

சேர்த்தபின் தேனாமோ? -- நன்னெஞ்சே

(பகைவனுக்) 3


இப்பாடலின் முதல் மூன்று அடிகளும் நான்காமடியின் முற்பகுதியுமான ஏழு வரிகம் 'பாரதி அறுபத்தாறு' என்னும் பகுதியுள் 32 ஆம் பாட்டில் உள்ளன.


வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது

வாழ்வுக்கு நேராமோ? -- நன்னெஞ்சே

தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென்

சாத்திரங் கேளாயோ? -- நன்னெஞ்சே

(பகைவனுக்) 4


போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்

போலுவந் தானுமவன் -- நன்னெஞ்சே

நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு

நின்றதுங் கண்ண னன்றோ? -- நன்னெஞ்சே (பகைவனுக்) 5


தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய் -- நன்னெஞ்சே

அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்

அவளைக் கும்பிடுவாய் -- நன்னெஞ்சே

(பகைவனுக்) 6



-----------------------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்


தெளிவு


எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்

  ஏழைமை யுண்டோடா? -- மனமே!

பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்

  புத்தி மயக்க முண்டோ? 1


உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்

  உள்ளங் குலைவ துண்டோ? -- மனமே!

வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்

  வேதனை யுண்டோடா? 2


சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்

  செய்கையுந் தேர்ந்துவிட்டால், -- மனமே,

எத்தனை கோடி இடர்வந்து சூழினும்

  எண்ணஞ் சிறிது முண்டோ? 3


----------------------------------------------------------------------

வேதாந்தப் பாடல்கள்


ஆத்ம ெஐயம்


கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்

  கவர்ந்திட மாட்டாவோ? -- அட,

மண்ணில் தெரியுது வானம், அதுநம்

  வசப்பட லாகாதோ?

எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்

  கிறுதியிற் சோர்வோமோ? -- அட,

விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்

  மேவு பராசக்தியே. 1


என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,

  எத்தனை மேன்மைகளோ --

தன்னை வென்றாலவை யாவும் பெறுவது

  சத்திய மாகுமென்றே

முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்

  முற்று முணர்ந்த பின்னும்

தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு

  தாழ்வுற்று நிற்போமோ? 2


-----------------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

பரசிவ வெள்ளம்


உள்ளும் புறமுமாய்

  உள்ளதெலாந் தானாகும்

வெள்ள மொன் றுண்டாமதனைத்

  தெய்வமென்பார் வேதியரே. 1


காணுவன நெஞ்சிற்

  கருதுவன உட்கருத்தைப்

பேணுவன யாவும்

  பிறப்பதந்த வெள்ளத்தே. 2


எல்லைபிரி வற்றதுவாய்

  யாதெனுமோர் பற்றிலதாய்

இல்லையுள தென்றறிஞர்

  என்றுமய லெய்துவதாய். 3


வெட்டவெளி யாயறிவாய்

   வேறுபல சக்திகளைக்

கொட்டுமுகி லாயணுக்கள்

   கூட்டிப் பிரிப்பதுவாயை 4


தூல வணுக்களாய்ச்

  சூக்குமமாய்ச் சூக்குமத்திற்

சாலவுமே நுண்ணியதாய்த்

  தன்மையெலாந் தானாகி 5


தன்மையொன்றி லாததுவாய்த்

  தானே ஒரு பொருளாய்த்

தன்மை பலவுடைத்தாய்த்

  தான்பலவாய் நிற்பதுவே. 6


எங்குமுளான் யாவும்வலான்

  யாவுமறி வானெனவே

தங்கு பலமதத்தோர்

  சாற்றுவதும் இங்கிதையே. 7


வேண்டுவோர் வேட்கையாய்

  வேட்பாராய் வேட்பாருக்

கீண்டுபொரு ளாயதனை

  யீட்டுவதாய் நிற்குமிதே.


8


காண்பார்தங் காட்சியாய்க்

  காண்பாராய்க் காண்பொருளாய்

மாண்பார்ந் திருக்கும்,

  வகுத்துரைக்க வொண்ணாதே. 9


எல்லாந் தானாகி

  யிருந்திடினும் இஃதறிய

வல்லார் சிலர்ரென்பர்

  வாய்மையெல்லாங் கண்டவரே. 10


மற்றிதனைக் கண்டார்

  மலமற்றார் துன்பமற்றார்

பற்றிதனைக் கொண்டார்

  பயனனைத்துங் கண்டாரே. 11


இப்பொருளைக் கண்டார்

  இடருக்கோர் எல்லைகண்டார்

எப்பொருளுந் தாம்பெற்றிங்

  கின்பநிலை யெய்துவரே. 12


வேண்டுவ வெலாம் பெறுவார்

  வேண்டா ரெதனையுமற்

றீண்டுபுவி யோரவரை

  யீசரெனப் போற்றுவரே. 13


ஒன்றுமே வேண்டா

  துலகனைத்தும் ஆளுவர்காண்

என்றுமே யிப்பொருளோ

  டேகாந்தத் துள்ளவரே. 14


வெள்ளமடா தம்பி

  விரும்பியபோ தெய்திநின

துள்ளமிசைத் தானமுத

  வூற்றாய்ப் பொழியுமடா. 15


யாண்டுமிந்த இன்பவெள்ளம்

  என்று நின்னுள் வீழ்வதற்கே

வேண்டு முபாயம்

  மிகவுமெளி தாகுமடா. 16


எண்ணமிட்டா லேபோதும்

  எண்ணுவதே இவ்வின்பத்

தண்ணமுதை யுள்ளே

  ததும்பப் புரியுமடா. 17


எங்கு நிறைந்திருந்த

  ஈசவெள்ள மென்னகத்தே

பொங்குகின்ற தென்றெண்ணிப்   

  போற்றி நின்றாற் போதுமடா. 18


யாதுமாம் ஈசவெள்ளம்

  என்னுள் நிரம்பியதென்

றோதுவதே போதுமதை

  உள்ளுவதே போதுமடா. 19


காவித் துணிவேண்டா

  கற்றைச் சடைவேண்டா

பாவித்தல் போதும்

  பரமநிலை யெய்துதற்கே. 20


சாத்திரங்கள் வேண்டா

  சதுமறைக ளேதுமில்லை

தோத்திரங்க ளில்லையுளந்

  தொட்டுநின்றாற் போதுமடா. 21


.தவமொன்று மில்லையொரு

  சாதனையு மில்லையடா

சிவமொன்றே யுள்ளதெனச்

  சிந்தைசெய்தாற் போதுமடா. 22


சந்ததமு மெங்குமெல்லாந்

  தானாகி நின்றசிவம்

வந்தெனுளே பாயுதென்று

  வாய்சொன்னாற் போதுமடா. 23


.நித்தசிவ வெள்ளமென்னுள்

  வீழ்ந்து நிரம்புதென்றுன்

சித்தமிசைக் கொள்ளுஞ்

  சிரத்தை யொன்றே போதுமடா. 24


-------------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்

பொய்யோ? மெய்யோ?


[எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மைதான். ஆனால், எல்லாருக்கும், எப்போதும், ஒரே சாஸ்திரம் ஒத்துவராது. சின்ன திருஷ்டாந்தம் சொல்லுகின்றேன்: --


ஒரு செல்வர், கிழவனார்; ஒரு வேளை ஆஹாரம் செய்துகொண்டு, லௌகிக விஷயங்களைத் தான் கவனியாமல், பிள்ளைகள் கையிலே கொடுத்துவிட்டு, நியம நிஷ்ட்டைகள் ஜப தபங்களுடன் சுந்தர காண்டத்தையும் கடோபநிஷத்தையும், பாராயணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறாம லிருப்பதே மேலான வழியென்ற கொள்கை இந்தக் கிழவனுக்குச் சரிப்பட்டு வரும்.


ஒரு 16 வயது ஏழைப்பிள்ளை; தகப்பனில்லை; வீட்டிலே தாயாருக்கும் தங்கைக்கும் தனக்குமாக எங்கேனும் போய் நாலு பணம் கொண்டுவந்தால்தான் அன்றன்று அடுப்பு மூட்டலாம். இவன் மேற்படி சுந்தரகாண்டவழியைப் போய்ப் பிடித்தால் நியாயமாகுமா?


‘இந்த உலகமே பொய்’ என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கிவருகிறது. சந்யாசின்கன் இதை ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கட்டும். அதைப்பற்றி, இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை. குடும்பத்தில் இருப்போருக்கு அந்த வார்த்தை பொருந்துமா? நடுவீட்டில் உச்சரிக்கலாமா? அவச்சொல்லன்றோ? நமக்குத் தந்தை வைத்து விட்டுப் போன வீடும் வயலும் பொய்யா? தங்கச் சிலை போலே நிற்கிறாள் மனைவி. நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீர்விட்டுக் கரைந்தாள்; நம் மகிழ்ச்சியின்போதெல்லாம் உடல் பூரித்தாள்; நமது குழந்தைகளை வளர்த்தாள்; அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானா? பெற்றவரிடம் கேட்கிறேன். குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?


வீடுகட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கும் மேற்படி சாஸ்திரம் பயன்படாது. நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்கும். இவற்றைத் தரும்படி தத்தம் குலதெய்வங்களை மன்றாடிக் கேட்கவேண்டும். எல்லா தெய்வங்களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்ற மூன்றிலும் தெய்வ ஒளி காணவேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும்.]


உலகத்தை நோக்கி வினவுதல்


நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

  நீங்களெல்லாம்

சொற்பனந்தானா? -- பல

  தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,

  நீங்களெல்லாம்

அற்ப மாயைகளோ? -- உம்முள்

  ஆழ்ந்த பொருளில்லையோ? 1


வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,

  நீங்களெல்லாம்

கானலின் நீரோ? -- வெறுங்

  காட்சிப் பிழைதானோ?

போனதெல்லாம் கனவினைப்போற்

  புதைந்தழிந்தே போனதனால்

நானுமோர் கனவோ? -- இந்த

  ஞாலமும் பொய்தானோ? 2


காலமென்றே ஒருநினைவும்

  காட்சியென்றே பலநினைவும்

கோலமும் பொய்களோ? -- அங்குக்

  குணங்களும் பொய்களோ?

சோலையிலே மரங்களெல்லாம்

  தோன்றுவதோர் விதையிலென்றால்

சோலை பொய்யாமோ? -- இதைச்

  சொல்லொடு சேர்ப்பாரோ? 3


காண்பவெல்லாம் மறையுமென்றால்

  மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?

வீண்படு பொய்யிலே -- நித்தம்

  விதிதொடர்ந் திடுமோ?

காண்பதுவே உறுதிகண்டோம்,

  காண்பதல்லால் உறுதியில்லை

காண்பது சக்தியாம் -- இந்தக்

  காட்சி நித்தியமாம். 4



-------------------------------------------------------


வேதாந்தப் பாடல்கள்


நான்

இரட்டைக் குறள்வெண் செந்துறை


வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்

  மண்ணில் திரியும் விலங்கெலாம் நான

கானிழல் வளரும் மரமெலாம்நான்

  காற்றும் புனலும் கடலுமே நான். 1


இப்பாட்டின் தலைப்பாக ‘இயற்கை சொல்லிடை’ என்று முதல் பதிப்பிலே உள்ளது.


[பாட பேதம்]: ‘காண்பதெல்லா மறையுமென்றால் மறைந்த வெல்லாம்’ என்றும்,

‘காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்த வெல்லாம்’

என்றும் பாடம் கொள்ளலாம் என்கிறார் கவிமணி.


‘காண்பதுவே யுறுதி யென்னாய்’ என்றும்,

‘காண்பதுவே யுண்மை கண்டாய்’ என்றும்

பாடம் கொள்ளலாம் என்கிறார் கவிமணி.


விண்ணில் தெரிகின்ற மீனெலாம்நான்

  வெட்ட வெளியின் விரிவெலாம்நான்

மண்ணில் கிடக்கும் புழுவெலாம்நான்

  வாரியிலுள்ள உயிரெலாம்நான். 2


கம்ப னிசைத்த கவியெலாம்நான்

  காருகர் தீட்டும் உருவெலாம்நான்

இம்பர் வியக்கின்ற மாட கூடம்

  எழில்நகர் கோபுரம் யாவுமேநான். 3


இன்னிசைமாதரிசையுளேன் நான்

  இன்பத் திரள்கள் அனைத்துமேநான்

புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்

  பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம்நான். 4


மந்திரங் கோடிஇயக்குவோன் நான்

  இயங்கு பொருளின் இயல்பெலாம்நான்

தந்திரங் கோடி சமைத்துளோன்நான்

  சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். 5


அண்டங்கள் யாவையும் ஆக்கினோன்

  அவை பிழையாமே சுழற்றுவோன் நான்

கண்டநற் சக்திக் கணமெலாநான்

  காரண மாகிக் கதித்துளோனான். 6


நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

  ஞானச் சுடர்வானில் செல்லுவோன்நான்

ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்

  அறிவாய் விளங்கு முதற்சோதிநான். 7



-----------------------------------------------------


தேசிய கீதங்கள் : தேசபக்திப் பாடல்கள்



1. பாரத நாடு

2. தமிழ் நாடு

3. சுதந்திரப் பள்ளு

4. தேசிய இயக்கப் பாடல்கள்

5. தேசியத் தலைவர்கள்

6. பிற நாடுகள்


தேசிய கீதங்கள் என்னும் இப் பகுதியில் உள்ள பாடல்கள் “ஸ்வதேச கீதங்கள்”, “ஜன்ம பூமி”, “நாட்டுப் பாட்டு”, “மாதா மணிவாசகம்” முதலிய நூல்களினின்றும் தொகுக்கப்பட்டு, பாரதிநூல்களின் முதலிரண்டு

பாகங்களிலே சேர்க்கப்பட்டிருந்தன. அவ்விரு பாகங்களுள் வேறு பாடல்களும் சேர்க்கப்பெற்றிருந்தன. “தேசிய கீதங்கள்” மட்டும் பிரித்து 1929 ஆம் வருஷத்தில் தனிப்பதிப்பாக முதலில் பிரசுரிக்கப்பட்டது.


“ஸ்வதேச கீதங்கள்” என்னும் நூல் 1908 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியாயிற்று.


‘ஜன்ம பூமி’ (ஸ்வதேச கீதங்கள்-இரண்டாம் பாகம்) 1909 இல் வெளியாயிற்று.


“மாதா மணிவாசகம்” என்னும் நூல் 1914 ஆம் ஆண்டில்

தென்னாப்பிரிக்காவில் வெளியாயிற்று.


“நாட்டுப் பாட்டு” என்னும் பாடல் தொகுதியை திரு. பரலி. சு.

நெல்லையப்பர் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1919ஆம் ஆண்டில் வெளியாயிற்று.


“ஸ்வதேச கீதங்கள்” என்னும் நூலிலுள்ள சமர்ப்பணமும் முகவுரையும் வருமாறு:


சமர்ப்பணம்


ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜூனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை

விளக்கியதொப்ப, எனக்குப் பாரத தேவியின் ஸ்மர்ணரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தி யுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணமலர்களில்

இச்சிறு நூலை சமர்ப்பிக்கின்றேன்.


-- ஆசிரியன்


முகவுரை


ஒருமையும் யௌவனத்தன்மையும் பெற்று விளங்கும் பாரத தேவியின் சரணங்களிலே யான் பின்வரும் மலர்கள்கொண்டு சூட்டத் துணிந்தது எனக்குப் பிழையென்றும் தோன்றவில்லை. யான் சூட்டியிருக்கும் மலர்கள் மணமற்றன வென்பதை நன்கறிவேன். தேவலோகத்துக்குப் பாரிஜாத மலர்கள் சூடத் தகுதிகொண்ட திருவடிகளுக்கு எனது மணமற்ற முருக்கம்பூக்கள் அணிக்குறைவை விளைவிக்கு மென்பதையும் நான் தெரிந்துள்ளேன். ஆயினும் உள்ளன்பு மிகுதியால் இச் செய்கையிலே துணிவுகொண்டுவிட்டேன். சாக்கியன் எறிந்த கற்களையும் சிவபிரான் மலர்களாகக் கருதி அங்கீகரிக்கவில்லையா? அதனையொப்ப, எனது குணமற்ற பூக்களையும் பாரதமாதா கருணையுடன் ஏற்றருளுக!


-- சி. சுப்பிரமணிய பாரதி


குறிப்பு: இந்தப் பாடல்களைப் பிரசுரிக்குமாறு என்னைத் தூண்டி, இவை வெளிப்படுவதில் மிகுந்த ஆவல் காட்டி உதவிகளியற்றிய மித்திரர்களிடம் மிக்க நன்றிபாராட்டுகின்றேன்.


1908 வருடம் ஜனவரி மாதம் 10-ம் தேதி மைலாப்பூர்.


‘ஜன்ம பூமி’(“ஸ்வதேச கீதங்கள்” -- இரண்டாம் பாகம்) என்னும் நூலிலுள்ள சமர்ப்பணமும் முகவுரையும் வருமாறு:


சமர்ப்பணம்


எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமலுணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதாதேவிக்கு

இந்நூலை சமர்ப்பிக்கின்றேன்.


-- சி. சுப்பிரமணிய பாரதி்


முகவுரை


இனிய நிலவின் ஒளியால் விழுங்கப்பட்டு உலகம் அவாங்மனகோசரமாகிய சௌந்தர்யத்தைப்பெற்றிருக்கும் சமயத்தில், ஒவ்வொரு கவிஞனுடைய உள்ளமும் தன்னையறியாது குஹலமடைகின்றது. சூரியன் உதித்தவுடனே சேதனப்பிரதிகிருதி மட்டுமேயன்றி அசேதனப் பிரகிருதியும், புதிய ஜீவனையும் உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இவற்றினையொப்பவே, நாட்டில் ஓர் புதிய ஆதர்சம் -- ஓர் கிளர்ச்சி -- ஓர் தர்மம் -- ஓர் மார்க்கம் -- தோன்றுமேயானால், மேன் மக்களின் நெஞ்சமனைத்தும், இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்தமலர்போல, அவ் வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய “தேசபக்தி” என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறைவுடையவனாகிய யானும் தேவியினது கிருபையால் அப்புதிய சுடரினிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்ன காரணமாகச் சென்ற வருஷம் சில கவிதைமலர் புனைந்து, மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன்.


நான் எதிர்பார்த்திராதவண்ணமாக மெய்த் தொண்டர்கள் பலர் “இம்மலர்கள் மிக நல்லன” என்று பாராட்டி மகிழ்ச்சியறிவித்தார்கள். மாதாவும் அதனை அங்கீகாரம் செய்து கொண்டாள். இதனால் துணிவுமிகுதியுறப் பெற்றோனாகி, மறுபடியும் தாயின் பதமலர்க்குச் சில புதிய மலர்கள் கொணர்ந்திருக்கின்றேன். இவை மாதாவின் திருவுள்ளத்திற்கு மகிழ்ச்சியளிக்கு மென்றே நினைக்கின்றேன்; “குழலினிது யாழினிதென்ப தம் மக்கள் மழலைச்சொற் கேளாதவர்” என்பது வேதமாதலின்.


இங்ஙனம்,

சி. சுப்பிரமணிய பாரதி்



பாரத நாடு


வந்தே மாதரம்


தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு

ராகம் -- நாதநாமக்கிரியை] [தாளம் -- ஆதி


பல்லவி



வந்தே மாதரம் என்போம்-எங்கள்

மாநிலத் தாயை வணங்குது என்போம். (வந்தே)


சரணங்கள்


1 ஜாதி மதங்களைப் பாரோம் -- உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்

  வேதிய ராயினும் ஓன்றே -- அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

2 ஈனப் பறையர்க ளேனும -- அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

  சீனத்த ராய்விடு வாரோ? -- பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3 ஆயிரம் உண்டிங்கு ஜாதி  -- னில் அன்னியர் வந்து 

   புகல் என்ன நீதி? -- ஓர் தாயின் வயிற்றில்

  பிறந்தோர் -- தம்முள் சண்டை செய்தாலும்சகோதரர் அன்றோ? (வந்தே)

4  ஒன்றுபட் டாலுண்டு வாழ்வு -- நம்மில் ஒற்றுமை நீங்கி லனைவர்க்கும் தாழ்வே

    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் -- இந்த ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

5 எப்பதம் வாய்த்திடு மேனும் -- நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்

  முப்பது கோடியும் வாழ்வோம -- வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம். (வந்தே)

6 புல்லடி மைத்தொழில் பேணிப் -- பண்டு போயின நாட்களுக் கினிமனம் நாணித்

   தொல்லை இகழ்ச்சிகள் தீர -- இந்தத் தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)


----------------------------------------------------------------------------------------------------


பாரத நாடு


வந்தே மாதரம்


[ராகம் -- ஹிந்துஸ்தானி பியாக்] [தாளம் -- ஆதி]



பல்லவி


    வந்தே -- மாதரம் -- ஜய

    வந்தே மாதரம்



{ [பாட பேதம்] : ‘பின்னமக்கெது வேண்டும்’

      -- ஸவ்தேச கீதங்கள்

1919 ஆம் ஆண்டில் வெளிவந்த பாடல் தொகுதியான ‘நாட்டுப்பாட்டு’ என்ற பகுதியில் 2,3,6 சரணங்கள் இடம் பெறவில்லை.}


சரணங்கள்


ஜயஜய பாரத

ஜயஜய பாரத

ஜயஜய பாரத

ஜயஜய ஜயஜய    


(வந்தே)


1

   

ஆரிய பூமியில்

நாரிய ரும்நர

சூரிய ரும்சொல்லும்

வீரிய வாசகம்



(வந்தே)



  2

       

நொந்தே போயினும்

வெந்தே மாயினும

நந்தே சத்தர்

உவந்தே சொல்வது


(வந்தே)



3


ஒன்றாய் நின்றினி

வென்றா யினுமுயிர்

சென்றா யினும்வலி

குன்றா தோதுவம்

(வந்தே)

4



-----------------------------------------


பாரத நாடு


நாட்டு வணக்கம்


சுதேச வந்தனம்

ராகம்-காம்போதி   [தாளம் -- ஆதி]

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

    இருந்ததும் இந்நாடே -- அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

    முடிந்ததும் இந்நாடே -- அவர்

சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து

    சிறந்தது மிந்நாடே -- இதை

வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்

    வாயுற வாழ்த்தேனோ -- இதை

வந்தே மாதரம், வந்தே மாதரம்

    என்று வணங்கேனோ?



1


இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்

    ஈந்ததும் இந்நாடே -- எங்கள்

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி

    அறிந்ததும் இந்நாடே -- அவா

கன்னியராகி நிலவினி லாடிக்

    களித்ததும் இந்நாடே -- தங்கள்

பொன்னுடல் இன்புற நீர்விளை யாடிஇல்

    போந்ததும் இந்நாடே -- இதை

வந்தே மாதரம், வந்தே மாதரம்

    என்று வணங்கேனோ?


2.


மங்கைய ராயவர் இல்லறம் நன்கு

    வளர்த்ததும் இந்நாடே -- அவர்

தங்க மதலைகள் தூன்றமுள் ஈட்டித்

    தழுவிய திந்நாடே -- மக்கள்

துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்

    சூழ்ந்ததும் இந்நாடே -- பின்னர்

அங்கவர் மாய அவருடற் பூந்துகள்

    ஆர்ந்ததும் இந்நாடே -- இதை

வந்தே மாதரம், வந்தே மாதரம்

    என்று வணங்கேனோ?


3



--------------------------------------------


பாரத நாடு


பாரத நாடு


[ராகம் -- ஹிந்துஸ்தானி தோடி]


பல்லவி



          பாருக்குள்ளே நல்ல நாடு -- எங்கள

          பாரத நாடு.



சரணங்கள்

ஞானத்தி லேபர மோனத்திலே -- உயர்

   மானத்திலே அன்ன தானத்திலே,

கானத்தி லேஅமு தாக நிறைந்த

   கவிதையி லேஉயர் நாடு -- இந்தப்





(பாருக்)


1


தீரத்தி லேபடை வீரத்திலே -- நெஞ்சில்

   ஈரத்தி லேஉப காரத்திலே,

சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு

   தருவதி லேஉயர் நாடு -- இந்தப்




(பாருக்)


2


நன்மையி லேஉடல் வன்மையிலே -- செல்வப்

   பன்மையி லேமறத் தன்மையிலே,

பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்

   புகழினி லேஉயர் நாடு -- இந்தப்



(பாருக்)


3


ஆக்கத்தி லேதொழி ஊக்கத்திலே -- புய

   வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே,

காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்

   கடலினி லேஉயர் நாடு -- இந்தப்



(பாருக்)


4


வண்மையி லேஉளத் திண்மையிலே -- மனத்

   தண்மையி லேமதி நுண்மையிலே,

உண்மையி லேதவ றாத புலவர்

   உணர்வினி லேஉயர் நாடு -- இந்தப்



(பாருக்)


5


யாகத்தி லேதவ வேகத்திலே -- தனி

   யோகத்தி லேபல போகத்திலே

ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்

   அருளினி லேஉயர் நாடு -- இந்தப்



(பாருக்)


6


ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்

   காற்றினி லேமலைப் பேற்றினிலே

ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி

   இனத்தினி லேஉயர் நாடு -- இந்தப்



(பாருக்)


7


தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே -- கனி

   ஈட்டத்தி லேபயி ஊட்டத்திலே

தேட்டத்தி லேஅடங் காத நிதியின்

   சிறப்பினி லேஉயர் நாடு -- இந்தப்


(பாருக்)

8



-----------------------------------------------------------


பாரத நாடு


பாரத தேசம்


[ராகம் -- புன்னாகவராளி]



பல்லவி


பாரத தேசமென்று பெயர்சொல்லுவார் -- மிடிப்

பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்.



சரணங்கள்


வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் -- அடி

மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம் எங்கள்

பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.




(பாரத) 1


சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.




(பாரத) 2


வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்

வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்

எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே

எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.




(பாரத) 3


முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே

மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே

நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து

நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே




(பாரத) 4


சிந்து நதியின்மிசை நிலவினிலே

சேரநன் னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்

தோணிக ளோட்டிவிளை யாடிவருவோம்.




(பாரத) 5


கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.




(பாரத) 6


காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்

ராசபுத் தானத்து வீரர் தமக்கு

நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.




(பாரத) 7


பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்

காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்.




(பாரத) 8


ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம்செய் வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.




(பாரத) 9


குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம

கோணிகள் செய்வோம் இரும் பாணிகள்செய்வோம்

நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.




(பாரத) 10


மந்திரம் கற்போம்வினைத் தந்திரங் கற்போம்

வானை யளப்போம் கடல் மீனையளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்

சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.




(பாரத) 11


காவியம் செய்வோம்நல்ல காடுவளர்ப்போம்

கலை வளர்ப்போம்கொல்ல ருலைவளர்ப்போம்

ஓவியம் செய்வோம்நல்ல ஊசிகள்செய்வோம்

உலகத் தொழிலனைத்து முவந்துசெய்வோம்.



(பாரத) 12



-----------------------------------------------


பாரத நாடு


எங்கள் நாடு


[ராகம்-பூபாளம்]


மன்னும் இமயமலை யெங்கள் மலையே

    மாநில மீதிது போற் பிறிதிலையே!

இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே

    இங்கிதன் மாண்பிற் கெதிரதுவேறே?

பன்னரு முபநிட நூலெங்கள் நூலே

    பார்மிசை யேதொரு நூல் இது போலே!

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே

    போற்றுவம் இஃதை எமக்கிலைஈடே.


1


மாரத வீரர் மலிந்தநன் னாடு

    மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு

நாரத கான நலந்திகழ் நாடு

    நல்லன யாவையும் நாடுறும் நாடு

பூரண ஞானம் பொலிந்தநன்நாடு

    புத்தர் பிரானருள் பொங்கிய நாடு

பாரத நாடு பழம்பெரும் நாடே

    பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.

  2



இன்னல்வந் துற்றிடும் போததற்கஞ்சோம்

    ஏழையராகி இனிமண்ணில் துஞ்சோம்

தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்

    தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்

கன்னலும் தேனும் கனியும் இன்பாலும்

    கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே

    ஓதுவம் இஃதை எமக்கிலைஈடே. 3



---------------------------------------------


பாரத நாடு


ஜய பாரத!



சிறந்து நின்ற சிந்தை யோடு

     தேயம் நூறு வென்றிவள்

மறந்த விர்ந்தந் நாடர் வந்து

     வாழி சொன்ன போழ்தினும்

இறந்து மாண்பு தீர மிக்க

     ஏழ்மை கொண்ட போழ்தினும்

அறந்த விர்க்கி லாது நிற்கும்

     அன்னை வெற்றி கொள்கவே!


1


\பு{[பாட பேதம்]: ‘பொருந்து நன்னாடு’‘உன்னத பாரத’

-- நாட்டுப் பாட்டு.}


நூறு கோடி நூல்கள் செய்து

     நூறு தேய வாணர்கள்

தேறும் உண்மை கொள்ள இங்கு

     தேடிவந்த நாளினும்,

மாறு கொண்டு கல்வி தேய

     வண்மை தீர்ந்த நாளினும்,

ஈறு நிற்கும் உண்மை யொன்று

     றைஞ்சி நிற்பள் வாழ்கவே!


2


வில்லர் வாழ்வு குன்றி ஓய

     வீர வாளும் மாயவே

வெல்லு ஞானம் விஞ்சி யோர்செய்

     மெய்ம்மை நூல்கள் தேயவும்

சொல்லும் இவ் வனைத்தும் வேறு

     சூழ நன்மை யுந்தர

வல்ல நூல் கெடாது காப்பள்

     வாழி அன்னை வாழியே!


3


தேவ ருண்ணும் நன்மருந்து

     சேர்ந்த கும்பம் என்னவும்

மேவுவார் கடற்கண் உள்ள

     வெள்ளநீரை ஒப்பவும்

பாவ நெஞ்சி னோர் நிதம்

     பறித்தல் செய்வ ராயினும்

ஓவிலாத செல்வம் இன்னும்

     ஓங்கும் அன்னை வாழ்கவே!


4


இதந்தரும் தொழில்கள் செய்து

   இரும்பு விக்கு நல்கினள்

பதந்தரற் குரிய வாய

   பன்ம தங்கள் காட்டினள்

விதம் பெறும்பல் நாட்டி னர்க்கு

   வேறொ ருண்மை தோற்றவே

சுதந்திரத்தி லாசை இன்று

   தோற்றி னாள்மன் வாழ்கவே!


5


----------------------------------------------


பாரத நாடு



பாரத மாதா


   தான தனதந்தன தான தனந்தன

    தானனத் தானா னே.



முன்னை இலங்கை அரக்கர் அழிய

முடித்தவில் யாருடைவில்? -- எங்கள்

அன்னை பயங்கரி பாரத தேவிநல்

ஆரிய ராணியின் வில்.



1


இந்திர சித்தன் இரண்டு துண்டாக

எடுத்தவில் யாருடைவில்? -- எங்கள்

மந்திரத் தெய்வதம் பாரதராணி

வயிரவி தன்னுடை வில்.


2


ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்

உலகின்பக் கேளியென்றே -- மிக

நன்றுபல் வேதம் வரைந்தகை பாரத

நாயகி தன்திருக் கை.


3


சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்

சித்தத்தில் ஓங்கிவிட்டால் -- துன்பம்

அத்தனையும் வெல்ல லாமென்று சொன்னசொல்

ஆரிய ராணியின் சொல்.

 


4



சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்

தட்டி விளையாடி -- நன்று

உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி

ஒளியுறப் பெற்ற பிள்ளை.




5

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது

கல்லொத்த தோள் எவர்தோள்? -- எம்மை

ஆண்டருள் செய்பவள், பெற்று வளர்ப்பவள்

ஆரிய தேவியின் தோள்.


6


சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்

தந்த தெவர் கொடைக் கை? -- சுவைப்

பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்

பாரத ராணியின் கை.


7


போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை

புகன்ற தெவருடை வாய்? -- பகை

தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத

தேவி மலர்த்திரு வாய்.



8


தந்தை இனிதுறந் தான் அரசாட்சியும்

தையலர் தம்முறவும் -- இனி

இந்த உலகில் விரும்பு கிலேன் என்றது

அம்எனை செய்தஉள்ளம்.


9


அன்பு சிவம் உல கத்துயர் யாவையும்

அன்பினிற் போகும் என்றே -- இங்கு

முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்

மொழிஎங்கள் அன்னை மொழி.


10


மிதிலை எரிந்திட வேதப் பொருளை

வினவும் சனகன் மதி -- தன்

மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது

வல்லநம் அன்னை மதி.


11


தெய்விகச் சாகுந் தலமெனும் நாடகம்

செய்த தெவர் கவிதை? -- அயன்

செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத

தேவி அருட்கவிதை.


12



-+-----------------------------------------


பாரத நாடு


எங்கள் தாய்


(காவடிச்சிந்தில், ‘ஆறுமுகவடி வேலவனே’ என்ற வர்ண மெட்டு)


1 தொன்று நிகழ்ந்த தனைத்தும்

உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் -- இவள் என்று பிறந்தவள்

என்றுண ராத இயல்பினளாம்

எங்கள்தாய்.

2 யாரும் வகுத்தற் கரிய பிராயத்த

ளாயினு மேயெங்கள்தாய் -- இந்தப் பாருள் எந் நாளுமோர்

கன்னிகை என்னப் பயின்றிடு

வாள் எங்கள்தாய்.

3 முப்பது கோடி முகமுடை யாள்

உயிர் மொய்ம்புற

வொன்றுடையாள -- இவள் செப்பு மொழிபதி

னெட்டுடையாள், எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்.

4 நாவினில் வேதமுடையவள்

கையில் நலந்திகழ் வாளுடையாள் -- தனை மேவினர்க் கின்னருள்

செய்பவள் தீயரை வீட்டிடு

தோளுடையாள்.

5 அறுபது கோடி தடக்கைக ளாலும்

அறங்கள் நடத்துவள் தாய -தனைச் செறுவது நாடி வருபவ

ரைத்துகள் செய்து கிடத்துவள்

தாய்.

6 பூமியினும் பொறை மிக்குடை

யாள்பெரும் புண்ணிய

நெஞ்சினள்தாய் -- எனில் தோமிழைப் பார்முன்

நின்றிடுங்ற்கொடுந் துர்க்கை

யனையவள் தாய்.

7 கற்றைச் சடைமதி வைத்த

துறவியைக் கைதொழு வாள்

எங்கள்தாய -- கையில் ஒற்றைத்

திகிரிகொண்டேழுல காளும்

ஒருவனை யுந்தொழுவாள்.

8 யோகத்தி லேநிக ரற்றவள்

உண்மையும் ஒன்றென

நன்றறிவாள -- உயர் போகத்தி லேயும்

நிறைந்தவள் எண்ணரும்

பொற்குவை தானுடையாள்.

9 நல்லறம் நாடிய மன்னரை

வாழ்த்தி நயம்புரி வாள்

எங்கள்தாய் -- அவர் அல்லவை ராயின்

அவரை விழுங்கிப்பின்

ஆனந்தக் கூத்திடுவாள்.

10 வெண்மை வளரிம யாசலன்

தந்த விறன்மக ளாம்

எங்கள்தாய -- அவன் திண்மை மறையினும்

தான்மறை யாள் நித்தஞ்

சீருறு வாள் எங்கள்தாய்.


--------------------------------------------------------------


பாரத நாடு


வெறிகொண்ட தாய்



பேயவள் காண் எங்கள் அன்னை -- பெரும்      பித்துடையள் எங்கள் அன்னை

காயழல் ஏந்திய பித்தன் தனைக்

     காதலிப்பாள் எங்கள் அன்னை.


(பேயவள்)


1


இன்னிசை யாம் இன்பக் கடலில் -- எழுந்து

     எற்றும் அலைத்திரள் வெள்ளம்

தன்னிடம் மூழ்கித் திளைப்பாள் -- அங்குத்

     தாவிக் குதிப்பாள் எம் அன்னை.




(பேயவள்)



2


தீஞ்சொற் கவிதையஞ் சோலை -- தனில்

     தெய்வீக நன்மணம் வீசும்

தேஞ்சொரி மாமலர் சூடி -- மதுத்

     தேக்கி நடிப்பள் எம் அன்னை.




(பேயவள்)




3


வேதங்கள் பாடுவள் காணீர் -- உண்மை

     வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்

ஓதருஞ் சாத்திரம் கோடி -- உணர்ந்

     தோதி யுலகெங்கும் விதைப்பாள்.



(பேயவள்)


4


பாரதப் போரெனில் எளிதோ? -- விறற்

     பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாளே

மாரதர் கோடிவந் தாலும் -- கணம்

     மாய்த்துக் குருதியில் திளைப்பாள். (பேயவள்)

5



--------------------------------------------------------


பாரத நாடு


பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி்



பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்

       புன்மை யிருட்கணம் போயின யாவும்

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி

       எழுந்து விளங்கிய அறிவெனும் இரவி;

தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்

       தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்.

விழிதுயில் கின்றனை இன்னும் எம் தாயே!

       வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!


1

புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்;

       பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்;

வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய்!

       வீதியெ லாம் அணு குற்றனர் மாதர்;

தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்

       சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;

அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை!

       ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!



2

பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;

       பார்மிசை நின்னொளி காணுதற்கு

அலந்தோம்; கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே

       கனிவுறு நெஞ்சக மலர்கொடு

வந்தோம்; சுருதிகள் பயந்தனை; சாத்திரம் கோடி

       சொல்லரு மாண்பின ஈன்றனை

அம்மே! நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!

       நிர்மலையே பள்ளி யெழுந்தரு ளாயே!



3

நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்

       நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ;

பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்

       பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!

என்ன தவங்கள்செயது எத்தனை காலம்

       ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?

இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?

       இன்னுயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!



4

\பு{[பாட பேதம்]: ‘பொங்கின தெங்குஞ்

‘ஆல்லிதெள்ள முதன்னையெ மன்னை’

‘பரிதியின் பேரொளி’

-- 1910ஆம் வருடப் பதிப்பு}


மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?

       மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ?

குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?

       கோமகளே! -- பெரும் பாரதர்க் கரசே!

விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி

       வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்

இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!

       ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே! 5



------------------------------------------------------


பாரத நாடு


பாரத மாதா நவரத்தின மாலை


[ராகம் -- ஹிந்துஸ்தானி தோடி]



காப்பு


வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த

பாரதமா தாவின் பதமலர்க்கே -- சீரார்

நவரத்ன மாலையிங்கு நான்சூட்டக் காப்பாம்

சிவரத்ன மைந்தன் திறம்.


 


வெண்பா


திறமிக்க நல்வயிரச் சீர்திகழும் மேனி

அறமிக்க சிந்தை; அறிவு -- பிறநலங்கள்

எண்ணற் றனபெறுவார் ‘இந்தியா’ என்ற நின்றன்

கண்ணொத்த பேருரைத்தக் கால்.


 


1



\பு{[மு-ப.]: ‘பள்ளியெழுந்தருள்வாயே’


ஒன்பது பாடலிலும் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இயற்கைப்

பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப்பட்டிருத்தல் காண்க.


சிவரத்ன மைந்தன் -- சிவமாகிய இரத்தினத்திற்குப் பிறந்த மைந்தன்; விநாயகன்.


-- பாரதி பிரசுராலயக் குறிப்பு}



              கட்டளைக் கலித்துறை


காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக்

    கும்பிட்டுக் கம்பனமுற்

றோலமிட் டோடி மறைந்தொழி வான்;

    பகை யொன்றுளதோ?

நீலக் கடலொத்த கோலத்தி

    னாள்மூன்று நேத்தி ரத்தாள்

காலக் கடலுக்கோர் பாலமிட்

    டாள் அன்னை காற்படினே.

2


          எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்


அன்னையே, அந்நாளில் அவனிக் கெல்லாம்

    ஆணிமுத்துப் போன்றமணி மொழிக ளாலே

பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்,

    பரவுபுகழ்ப் புராணங்கள், இதிக சங்கள்;

இன்னும்பல் நூல்களிலே இசைத்த ஞானம்

    என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்

மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற

    விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே. 3


                ஆசிரியப் பா


வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!

கற்றவ ராலே உலகு காப்புற்றது

உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம்

இற்றைநாள் வரையினும், அறமிலா மறவர்,

குற்றமே தமது மகுடமாக் கொண்டோர்

மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே

முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்;

பற்றை அரசர் பழிபடு படையுடன்

சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்.

இற்றை நாள்;


\பு{[குறிப்பு]: மூன்று நேத்திரந்தாள் -- இங்குலப் பாரத மாதாவை லோகதாவசீய

உமாதேவியாக பாவனை செய்யப்பட்டிருக்கின்றது.

-- பாரதி பிரசுராலயக் குறிப்பு}


பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்

பாரத நாடு புதுநெறி பழக்கல்

உற்றதிங் கிந்நாள் -- உலகெலாம் புகழ

இன்பவளம் செறி பண்பல பயிற்றும்

கவீந்திர னாகிய ரவீந்திர நாதன்

சொற்றது கேளீர்: -- “புவிமிசை யின்று

மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்,

தர்மமே உருவாம், மோஹன தாஸ

கர்ம சந்திர காந்தி” யென் றுரைத்தான்.

அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே

தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே

அரசிய லதனிலும், பிற இயலனைத்திலும்

வெற்றி தருமென வேதம் சொன்னதை

முற்றும் பேண முற்பட்டு நின்றார்

பாரத மக்கள். இதனால் படைஞர்தம்

செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத

கற்றோர் தலைப்படக் காண்போம் -- விரைவிலே.

(வெற்றி கூறுமின்; வெண்சங் கூதுமின்!)


4


              தரவுகொச்சகக் கலிப்பா


ஊதுமினோ வெற்றி!

    ஒலிமினோ வாழ்த்தொலிகள்!

ஓதுமினோ வேதங்கள்!

    ஓங்குமினோ! ஓங்குமினோ!

தீதுசிறி தும்பயிலாச்

    செம்மணிமா நெறிகண்டோம்;

வேதனைகள் இனி வேண்டா;

    விடுதலையோ திண்ணமே. 5


\பு{[குறிப்பு]: ‘இன்பவளம்’ என்பதில் பவளம் என்ற மணியின் பெயர்

அமைந்திருப்பது காண்க.


‘செம் மணி மா நெறி’ -- செவ்விய அழகிய பெரிய

நெறி; அஃது ஒத்துழையாமை. செம்மணி -- மாணிக்கம்.}



                 வஞ்சி விருத்தம்


திண்ணங் காணீர்! பச்சை

வண்ணன் பாதத் தாணை;

எண்ணம் கெடுதல் வேண்டா!

திண்ணம், விடுதலை திண்ணம்.


6


                   கலிப்பா


“விடுதலை பெறுவீர் விரை வா நீர்!

    வெற்றி கொள்வீர்” என்றுரைத் தெங்கும்

கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்

    கிளர்ச்சி தன்னை வளர்ச்சி செய் கின்றான்,

“சுடுத லும்குளி ரும் உயிர்க் கில்லை;

    சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை;

எடுமி னோஅறப் போரினை” என்றான்

    எங்கோ மேதகம் ஏந்திய காந்தி!


7


                அறுசீர் விருத்தம்


காந்திசேர் பதுமராகக்

    கடிமலர் வாழ் ஸ்ரீதேவி,

போந்துநிற் கின்றாள் இன்று

    பாரதப் பொன்னாடெங்கும்.

மாந்தரெல் லோரும்சோர்வை

    அச்சத்தை மறந்துவிட்டார்;

காந்திசொற் கேட்டார், காண்பார்

    விடுதலை கணத்தினுள்ளே.



8



           எழுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்


கணமெனு மென்றன் கண்முனே வருவாய்,

    பாரத தேவியே, கனல்கால்

இணைவிழி வால் வாயமாஞ் சிங்க

    முதுகினில் ஏறிவீற் றிருந்தே.

துணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம்

    துயர்கெட விடுதலை யருளி

மணிநகை புரிந்து திகழ் திருக்கோலம்

    கண்டுநான் மகிழ்ந்திடு மாறே.


9


------------------------------------------------------------


பாரத நாடு


பாரத தேவியின் திருத்தசாங்கம்


நேரிசை வெண்பா



நாமம்

(காம்போதி)


பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப்

பிச்சை யருளியதாய் பேருரையாய் -- இச்சகத்தில்

பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த

பாரதமா தேவியெனப் பாடு


1


நாடு

(வசந்தா)


தேனார் மொழிக்கிள்ளாய்! தேவியெனக் கானந்த

மானாள்பொன் னாட்டை அறிவிப்பாய் -- வானாடு

பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்

ஆரியநா டென்றே அறி.


2


நகர்

(மணிரங்கு)


இன்மழலைப் பைங்கிளியே எங்கள் உயிரானாள்

நன்மையுற வாழும் நகரெதுகொல்? -- சின்மயமே

நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது

தானென்ற காசித் தலம்.


3


ஆறு

(சுருட்டி)


வன்னக்கிளி! வந்தே மாதரமென் றோதுவரை

இன்னலறக் காப்பா ளியாறுரையாய் -- நன்னர்செயத்

தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்

வான்போந்த கங்கையென வாழ்த்து.


4


மலை

(கானடா)


சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள்

வாலை வளரும் மலைகூறாய் -- ஞாலத்துள்


5



ஊர்தி

(தன்யாசி)


சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்

ஊரும் புரவி உரைத்தாய்! -- தேரின்

பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்

அரிமிசையே ஊர்வாள் அவள்.


6



படை

(முகாரி)


கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்!

செருநரை வீழ்த்தும்படை யென்செப்பாய் -- பொருபவர்மேல்

தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்

திண்ணமுறு வான்குலிசம் தேரு.



\பு{[பாட பேதம்]: ‘தொன்மறை கணான்குடையாள்’

-- ஜன்ம பூமி.}

 


7


முரசு

(செஞ்சுருட்டி)


ஆசை மரகதமே அன்னைதிரு முன்றிலிடை

ஓசை வளர்முரசம் ஓதுவாய் -- பேசுகவோ

சத்தியமே செய்க தருமமே என்றொலிசெய்

முத்திதரும் வேத முரசு.


8

தார்

(பிலகரி)


வாராய் இளஞ்சுகமே வந்திப்பார்க் கென்றுமிடர்

தாராள் புனையுமணித் தார்கூறாய் -- சேராரை

முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்

பொற்றா மரைத்தார் புனைந்து.


9


கொடி

(கேதாரம்)


கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! குத்திரமும் தீங்கும்

மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென் -- அடிப்பணிவார்

நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி

குன்றா வயிரக் கொடி.


--------------------------------------------------------


பாரத நாடு


மாதாவின் துவஜம்


பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்


(தாயுமானவர் ஆனந்தக்களிப்பு வர்ணமெட்டு)


பல்லவி


தாயின் மணிக்கொடி பாரீர் -- அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

சரணங்கள்


1 ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தே

மாதரம் என்றே

பாங்கின் எழுதித் திகழும் செய்ய பட்டொளி வீசிப் பறந்தது

பாரீர்! (தாயின்)


2 பட்டுத் துகிலென லாமோ? அதில் பாய்ந்து சுழற்றும்

பெரும்புயற் காற்று

மட்டு மிகுந்தடித் தாலும் அதை மதியாதவ் வுறுதிகொள்

மாணிக்கப படலம்.


3 இந்திரன் வச்சிரம்

ஓர்பால் அதில் எங்கள் துருக்கர்

இளம்பிறை ஓர்பால் (தாய்)

மந்திரம் நடுவுறத்

தோன்றும் அதன் மாண்பை வகுத்திட

வல்லவன் யானோ?


4 கம்பத்தின் கீழ்நிற்றல்

காணீர் எங்கும் காணரும் வீரர்

பெருந்திருக் கூட்டம்

நம்பற் குரியர்அவ் வீரர் தங்கள் நல்லுயிர் ஈந்தும்

கொடியினைக் காப்பார்.


5 அணியணி யாயவர்

நிற்கும் இந்த ஆரியக் காட்சியோர்

ஆனந்தம் அன்றோ?

பணிகள் பொருந்திய

மார்பும் விறல் பைந்திரு வோங்கும்

வடிவமும் காணீர்!


6 செந்தமிழ் நாட்டுப்

பொருநர் கொடுந் தீக்கண் மறவர்கள்,

சேரன்றன் வீரர்

சிந்தை துணிந்த தெலுங்கர் தாயின் சேவடிக் கேபணி செய்திடு

துளுவர்,


7 கன்னடர் ஒட்டிய ரோடு் போரில் காலனும் அஞ்சக்

கலக்கும் மராட்டர்.

பொன்னகர்த் தேவர்க

ளொப்ப நிற்கும் பொற்புடையார் இந்து

ஸ்தானத்து மல்லர்,


8 பூதலம் முற்றிடும்,

வரையும் அறப் போர்விறல் யாவும்

மறப்புறும் வரையும்

சிந்தை துணிந்த

தெலுங்கர் பாரில் மறைவரும் கீர்த்திகொள்

ரஜபுத்ர வீரர்,


9 பஞ்ச நதத்துப்

பிறந்தோர் முன்னைப் பார்த்தன் முதற்பலர்

வாழ்ந்தநன் னாட்டார்,

துஞ்சும் பொழுதினும

தாயின் பதத் தொண்டு நினைந்திடும்

வங்கத்தி னோரும்,,


10 சேர்ந்ததைக் காப்பது

காணீர் அவர் சிந்தையின் வீரம்

நிரந்தரம் வாழ்க!

தேர்ந்தவர் போற்றும்

பரத நிலத் தேவி துவஜம் சிறப்புற

வாழ்க! (தாயின்)

---------------------------------------------------------


பாரத நாடு


பாரத ஜனங்களின் தற்கால நிலைமை


நொண்டிச்சிந்து


நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அஞ்சி யஞ்சிச் சாவார் -- இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே

வஞ்சனைப் பேய்கள் என்பார் -- இந்த

மரத்தில் என் பார்; அந்தக் குளத்தில் என்பார்,

துஞ்சுது முகட்டில் என்பார் -- மிகத்

துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு) 1


மந்திர வாதிஎன்பார் -- சொன்ன

மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;

யந்திர சூனியங்கள் -- இன்னும்

எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!

தந்த பொருளைக் கொண்டே -- ஜனம்

தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்

அந்த அரசியலை -- இவர்

அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்

(நெஞ்சு) 2


சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் -- ஊர்ச்

சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்

துப்பாக்கி கொண்டு ஒருவன் -- வெகு

தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்

அப்பால் எவனோசெல்வான் -- அவன்

ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்

எப்போதும் கைகட்டுவார் -- இவர்

யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு) 3


நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

கொஞ்சமோ பிரிவினைகள் -- ஒரு

கோடிஎன்றால் அது பெரிதாமோ?

ஐந்துதலைப் பாம்பென்பான் -- அப்பன்

ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்

நெஞ்சு பிரிந்திடுவார் -- பின்பு

நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.

(நெஞ்சு) 4


சாத்திரங்கள் ஒன்றுங்காணார் -- பொய்ச்)

சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே

கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் -- ஒரு

கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்;

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -- தமைச்

சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவர்;

ஆத்திரங் கொண்டே இவன்சைவன் -- இவன்

அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்.

(நெஞ்சு) 5


நெஞ்சு பொறுக்கு திலையே -- இதை

நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே

கஞ்சி குடிப்பதற்கிலார் -- அதன்

காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்

பஞ்சமோ பஞ்சம் என்றே -- நிதம்

பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்

துஞ்சி மடிகின்றாரே -- இவர்

துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.

(நெஞ்சு) 6


எண்ணிலா நோயுடையார் -- இவர்

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்

கண்ணிலாக் குழந்தைகள் போல் -- பிறர்

காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்

நண்ணிய பெருங்கலைகள் -- பத்து

நாலா யிரங்கோடி நயந்துநின்ற

புண்ணிய நாட்டினிலே -- இவர்

பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்.

(நெஞ்சு) 7



-----------------------------------------------------


பாரத நாடு


போகின்ற ஹிந்துஸ்தானமும், வருகின்ற ஹிந்துஸ்தானமும்


போகின்ற பாரதத்தைச் சபித்தல்



வலிமை யற்ற தோளினாய் போபோபோ

     மார்பிலே ஒடுங்கினாய்போபோபேர்

பொலிவிலா முகத்தினாய்போபோபோ

     பொறியிழந்த விழியினாய்போபோபோ

ஒலியிழந்த குரலினாய்போபோபோ

     ஒளியிழந்த மேனியாய்போபோபோ

கிலிபிடித்த நெஞ்சினாய்போபோபோ

     கீழ்மை யென்றும் வேண்டுவாய்போபோபோ


1



இன்று பாரதத்திடை நாய்போல்

     ஏற்ற மின்றி வாழுவாய் போபோபோ

நன்றுகூறில் அஞ்சுவாய்போபோபோ

     நாணிலாது கெஞ்சுவாய்போபோபோ

சென்றுபோன பொய்யெலாம் மெய்யாகச்

     சிந்தைகொண்டு போற்றுவாய்போபோபோ

வென்றுநிற்கும் மெய்யெலாம் பொய்யாக

     விழிமயங்கி நோக்குவாய் போபோபோ 2


வேறுவேறு பாஷைகள் -- கற்பாய்நீ

     வீட்டு வார்த்தை கற்கிலாய்போபோபோ

நூறு நூல்கள் போற்றுவாய் -- மெய்கூறும்

     நூலிலொத் தியல்கிலாய் போபோபோ

மாறுபட்ட வாதமே ஐந்நூறு

     வாயில்நீள ஓதுவாய் போபோபோ

சேறுபட்ட நாற்றமும் -- தூறுஞ் சேர்

     சிறிய வீடு கட்டுவாய் போபோபோ

3

    

ஜாதி நூறு சொல்லுவாய்போபோபோ

     தரும மொன் றியற்றிலாய் போபோபோ

நீதி நூறு சொல்லுவாய் -- காசென்று

     நீட்டினால் வணங்குவாய் போபோபோ

தீது செய்வ தஞ்சிலாய்-நின் முன்னே

     தீமைநிற்கி லோடுவாய் போபோபோ

சோதி மிக்க மணியிலே -- காலத்தால்

     சூழ்ந்த மாசு போன்றனை போபோபோ


4



வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்


ஒளி படைத்த கண்ணினாய் வாவாவா

     உறுதிகொண்ட நெஞ்சினாய்வாவாவா

களிபடைத்த மொழியினாய்வாவாவா

     கடுமைகொண்ட தோளினாய்வாவாவா

தெளிவுபெற்ற மதியினாய் வாவாவா

     சிறுமைகண்டு பொங்குவாய் வாவாவா

எளிமைகண்டு இரங்குவாய் வாவாவா

     ஏறுபோல் நடையினாய் வாவாவா


1



மெய்மை கொண்ட நூலையே -- அன்போடு

     வேதமென்று போற்றுவாய் வாவாவா

பொய்ம்மைகூற லஞ்சுவாய்வாவாவா

     பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வாவாவா

நொய்ம்மையற்ற சிந்தையாய்வாவாவா

     நோய்களற்ற உடலினாய் வாவாவா

தெய்வசாபம் நீங்கவே -- நங்கள் சீர்த்

     தேசமீது தோன்றுவாய் வாவாவ 2


இளைய பார தத்தினாய் வாவாவா

     எதிரிலா வலத்தினாய் வாவாவா

ஒளியிழந்த நாட்டிலே -- நின்றேறும்

     உதயஞாயி றொப்பவே வாவாவா

களையிழந்த நாட்டிலே -- முன்போலே

     கலைசிறக்க வந்தனை வாவாவா

விளையு மாண்பு யாவையும் -- பார்த்தன்போல்

     விழியினால் விளக்குவாய் வாவாவா


3

    

வெற்றிகொண்ட கையினாய் வாவாவா

     விநயம் நின்ற நாவினாய்வாவாவா

முற்றி நின்ற வடிவினாய் வாவாவா

     முழுமைசேர் முகத்தினாய்வாவாவா

கற்ற லொன்று பொய்க்கிலாய்வாவாவா

     கருதிய தியற்றுவாய் வாவாவா

ஒற்றுமைக்கு ளுய்யவே -- நாடெல்லாம்

     ஒருபெருஞ் செயல்செய்வாய் வாவாவா 4



-----------------------------------------------------------


பாரத நாடு


பாரத சமுதாயம்


[ராகம் -- பியாக்] [தாளம் -- திஸ்ர ஏகதாளம்]



பல்லவி


பாரத சமுதாயம் வாழ்கவே -- வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே -- ஜய ஜய ஜய






(பாரத)


அனுபல்லவி


முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பி லாத சமுதாயம்

உலகத் துக்கொரு புதுமை -- வாழ்க


சரணங்கள்


 


 


(பாரத)



மனித ருணவை மனிதர் பறிக்கும்

     வழக்கம் இனியுண்டோ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும்

     வாழ்க்கை இனியுண்டோ? -- புலனில்

     வாழ்க்கை இனியுண்டோ? -- நம்மி லந்த

     வாழ்க்கை இனியுண்டோ?

     இனிய பொழில்கள் நெடிய வயல்கள்

     எண்ணரும் பெருநாடு

     கனியும் கிழங்கும் தானியங்களும்

     கணக்கின்றித் தரு நாடு -- இது

     கணக்கின்றித் தரு நாடு -- நித்தம் நித்தம்      

      கணக்கின்றித் தரு நாடு -- வாழ்க (பாரத) 1


இனியொரு விதி செய்வோம் -- அதை

எந்த நாளும் காப்போம்

தனியொருவனுக் குணவிலை யெனில்

ஜகத்தினை அழித்திடுவோம் -- வாழ்க (பாரத) 2


“எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்”

     என்றுரைத்தான் கண்ண பெருமான்;

எல்லாரும் மரநிலை எய்தும் நன்முறையை

     இந்தியா உலகிற் களிக்கும் -- ஆம்

     இந்தியா உலகிற் களிக்கும் -- ஆம் ஆம்

     இந்தியா உலகிற் களிக்கும் -- வாழ்க (பாரத) 3


எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் -- நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் -- ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க (பாரத) 4



-----------------------------------------------------


பாரத நாடு


ஜாதீய கீதம்-1


               பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய

               ஜகத் பிரசித்தி கொண்ட ‘வந்தே மாதரம்’ கீதத்தின்


மொழிபெயர்ப்பு


இனியநீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!

தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!

பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே) 1


வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!

மலர்மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!

குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!

நல்குவை இன்பம் வரம்பல நல்குவை!

(வந்தே) 2


முப்பது கோடிவாய் (நின்னிசை) முழங்கவும்

அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்

‘திறனிலாள்’ என்றுனை யாவனே செப்புவன்?

அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி

பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை

(வந்தே) 3


\பு{[குறிப்பு]: வங்காளி பாஷையிலே ஏழு கோடியென்றே கூறி யிருக்கின்றது. ஆனால், அது வங்காளத்தை மட்டிலுமே குறிப்பிட்டது. 30 கோடி இந்தியா முழுமையின் ஜனத்தொகை.

-- 1937 ஆம் வருடப் பதிப்பு.}


நீயே வித்தை, நீயே தருமம்!

நீயே இதயம், நீயே மருமம்!

உடலகத் திருக்கும் உயிருமன் நீயே!

(வந்தே) 4


தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!

சித்த நீங்காதுறு பக்தியும் நீயே

ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்

தெய்விக வடிவமும் தேவியிங் குனதே!

(வந்தே) 5


ஒருபது படைகொளும் உமையவள் நீயே!

கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ!

வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ!

(வந்தே) 6


போற்றிவான் செல்வீ, புரையிலை, நிகரிலை!

இனியனீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை!

சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!

இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!

தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி! (வந்தே) 7



-------------------------------------------------------


பாரத நாடு


ஜாதீய கீதம்-2


(புதிய மொழிபெயர்ப்பு)


நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்

குளிர்பூந் தென்றலும், கொழும்பொழிற் பசுமையும்

வாய்ந்துநன் கிலகுவை, வாழிய அன்னை! (வந்தே) 1


\பு{[குறிப்பு]: முன்னொரு முறை முழுதும் அகவலாக ஒரு மொழிபெயர்ப்பு எழுதியிருந்தேன். ஆனால், அது பாடுவதற்கு நயப்படாதாகையால் இப்போது பல சந்தங்கள் தழுவி மொழிபெயர்த் தெழுதப்பட்டிருக்கின்றது.

-- பாரதியார்}


தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்

தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்

புன்னகை ஒளியும், தேமொழிப் பொலிவும்

வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை.

(வந்தே) 2


கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்

கோடி கோடி புயத்துணை கொற்றமார்

நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்

கூடு திண்மை குறைந்தனை, என்பதென்?

ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,

மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை.

(வந்தே) 3


அறிவுநீ, தருமம்நீ, உள்ளம்நீ, அதனிடை

மருமம்நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ,

தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ,

ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்

தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே.

(வந்தே) 4


தபத்து படைகொளும் பார்வதி தேவியும்

கமலத் திதழ்களிற் களித்திடும் கமலையும்

அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ!

(வந்தே) 5



திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!

தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை,

மருவு செய்களின் நற்பயன் மல்குவை,

வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை,

பெருகு மின்ப முடையை, குறுநகை

பெற்றொளிர் ந்தனை, பல்பணி பூண்டனை,

இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,

எங்கள் தாய்ந (வந்தே)

(வந்தே) 6


பிற்சேர்க்கை


ஜாதீய கீதம்


பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் வங்காளியில் இயற்றிய “வந்தே மாதரம்” கீதம்.



சூஜலாம், சூபலாம் மலயஜ ஸ்ரீதலாம்

சஸ்ய ஸ்யாமலாம் மாதரம். (வந்தே)


சூப்ர ஜ்யோத்ஸ்நா புலகித யாமிநீம்

புல்ல குசூமித த்ரும தள சோபிநீம்

சூஹாசிநீம், சூமதுர பாஷைநீம்

சூகதாம், வரதாம். மாதரம்

(வந்தே) 1


ஸப்த கோடி கண்ட கலகல நிநாதக ராலே

த்விசப்த கோடி புஜைர் த்ருத கரகர வாலே

கே போலே, மா துமி அபலே

பஹூபல தாரிணீம், நமாமி தாரிணீம்

ரிபுதள வாரிணீம், மாதரம்

(வந்தே) 2


துமி வித்யா, துமி தர்ம,

துமி ஹருதி, துமி மர்ம,

த்வம்ஹி ப்ராணா: சரீரே

பாஹூதே துமி மா சக்தி

தொமா ரேயி ப்ரதிமா கடிமந்திரே மந்திரே

(வந்தே) 3


த்வம் ஹி துர்கா தசப்ரஹாரண தாரிணீ

கமல கமலதல விஹாரிணீ

வாணி வித்யா, தாயிநீ, நமாமி த்வாம்

(வந்தே) 4


நமாமி, கமலாம், அமலாம் அதுலாம்

சூஜலாம், சூபலாம் மாதரமர்

ஸ்யாமலாம், சரலாம், சூஸ்மிதாம் ஷிதாம்

பரணீம், தரணீம், மாதரம்

(வந்தே) 5



----------------------------------------------------------


தமிழ் நாடு


செந்தமிழ் நாடு



செந்தமிழ் நாடெனும் போதினிலே -- இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே -- எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே -- ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே -- (செந்தமிழ்) 1


வேதம் நிறைந்த தமிழ்நாடு -- உயர்

வீரம் செறிந்த தமிழ்நாடு -- நல்ல

காதல் புரியும் அரம்பையர் போல்இளங்

கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) 2


காவிரி தென்பெண்ணை பாலாறு -- தமிழ்

கண்டதோர் வையை பொருனைநதி -- என

மேவிய யாறு பலவோடத் -- திரு

மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்) 3


முத்தமிழ் மாமுனி நீள்வரையே -- நின்று

மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு -- செல்வம்

எத்தனை யுண்டு புவிமீதே -- அவை

யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) 4


நீலத் திரைக்கட லோரத்திலே -- நின்று

நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -- வட

மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்

மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு. (செந்தமிழ்) 5


கல்வி சிறந்த தமிழ்நாடு -- புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு -- நல்ல

பல்வித மாயின சாத்திரத்தின் மணம்

பாரெங்கும் வீசும் தமிழ்நாடு. (செந்தமிழ்) 6


வள்ளுவன் தன்னை உலகினுக்கே -- தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -- நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி

யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்) 7


சிங்களம் புட்பகம் சாவக -- மாகிய

தீவு பலவினுஞ் சென்றேறி -- அங்கு

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்) 8


விண்ணை யிடிக்கும் தலையிமயம் -- எனும்

வெற்பை யடிக்கும் திறனுடையார் -- சமர்

பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் தமிழ்ப்

பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்) 9


சீன மிசிரம் யவனரகம் -- இன்னும்

தேசம் பலவும் புகழ்வீசிக் -- கலை

ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்) 10



---------------------------------------------------


தமிழ் நாடு


தமிழ்த் தாய்


தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்


(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)


1 ஆதி சிவன்பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.


2 மூன்று குலத்தமிழ் மன்னர் என்னை மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;

ஆன்ற மொழிகளி னுள்ளே உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.


3 கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வான வெளியையும்

சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.


4 சாத்திரங் கள்பல தந்தார் இந்தத் தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்;

நேத்திரங் கெட்டவன் காலன் தன்முன் நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.


5 நன்றென்றுந் தீதென்றும் பாரான் முன்பு நாடும் பொருள்கள் அனைத்தையும்

வாரிச் சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் வையச் சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.


6 கென்னிப் பருவத்தில் அந்நாள் என்றன் காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்

என்னென்ன வோபெய ருண்டு பின்னர் யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்.,


7 தந்தை அருள்வலி யாலும் முன்பு சான்ற புலவர் தவவலி யாலும்.

இந்தக் கணமட்டும் காலன் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.


8 இன்றொரு சொல்லினைக் கேட்டேன்! இனி ஏது செய்வேன்? என தாருயிர மக்காள்!்

கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!


9 “புத்தம் புதிய கலைகள் பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள்,

கூறும்: மெத்த வளருது மேற்கே அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

10 சொல்லவும் கூடுவ தில்லை அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;

மெல்லத் தமிழினிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்.”)


11 என்றந்தப் பேதை உரைத்தான் ஆ! இந்த வசையெனக் கெய்திட லாமோ!

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!


12 தந்தை அருள்வலி யாலும் இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும்

இந்தப் பெரும்பழி தீரும் புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.


---------------------------------------------------------------------


தமிழ் நாடு


தமிழ்


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

  இனிதாவது எங்கும் காணோம்.

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்

  இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

  வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

  பரவும்வகை செய்தல் வேண்டும். 1


யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,

  வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,

  உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

  வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

  தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

  தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

இறவாத புகழுடைய புதுநூல்கள்

  தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

  சொல்வதிலோர் மகிமை இல்லை;

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

  அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 3


உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்

  வாக்கினிலே ஒளி யுண்டாகும்;

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்

  கவிப்பெருக்கும் மேவு மாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்

  விழிபெற்றுப் பதவி கொள்வார்;

தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்

  இங்கமரர் சிறப்புக் கண்டார். 4



-----------------------------------------------


தமிழ் நாடு


தமிழ் மொழி வாழ்த்து


    தான தனத்தன தான தனத்தன

    தான தந்தா னே.


வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

  வாழிய வாழிய வே.

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

  வண்மொழி வாழிய வே.

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

  இசைகொண்டு வாழிய வே..

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

  என்றென்றும் வாழிய வே.

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

  துலங்குக வையகமே.

தொல்லை வினைதரு தொல்லை யகன்று

  சுடர்க தமிழ்நாடே.

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி

  வாழ்க தமிழ்மொழி யே.

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

  வளர்மொழி வாழிய வே.


------------------------------------------------


தமிழ் நாடு


தமிழகச் சாந்தி



எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்

நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்

பாசியும் புதைந்து பயன் நீர்இலதாய்

நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?

விதியே, விதியே, தமிழச் சாதியை


5

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்

தன்மையும் தனது தருமமும் மாயாது

என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்

வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ? 10

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று

உள்ளுறு தருமமு உண்மையும் மாறிச்  

\பு{ இப்பாடல் எண்ணிடப்படாத, மிகவுஞ் சிதைவுற்ற கைப் பிரதித்

துணுக்குகளினின்றும் சேகரிக்கப்பட்டது. ஆரம்பத்திலும் முடிவிலும் உள்ள

வரிகள் கிடைக்கவில்லை. தலைப்பு ‘இருதலைக் கொள்ளியினிடையே’ எனக்

கொடுக்கப் பட்டுள்ளது.

-- 1937 ஆம் வருடப் பதிப்பில் உள்ள பாரதி பிரசுராலயத்தினர் குறிப்பு.


[பாட பேதம்]: ‘தருமமு மழியா’}

சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?

‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?

வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? 15

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?

விதியே, தமிழச் சாதியை எவ்வகை

விதித்தாய்’ என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.

ஏனெனில்,

“சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும், 20

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்

ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,

‘எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்

கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்

முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச் 25

சாதியை அமரத் தன்மை வாய்ந்தது” என்று

உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்

சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்

உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்

கண்டுஎனது உள்ளம் கலங்கிடா திருந்தேன். 30

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்

மிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள

பற்பல தீவினும் பரவி யிவ்வெளி்ய

தமிழச் சாதி, தடியுதை யுண்டும் 35

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்

வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்

பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம் 40

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்

இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;

‘தெய்வம் மறவார், செயுங்கடன் பிழையார்,

ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்

இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்’ 45

என்பதென் னுளத்து வேரகழ்ந் திருத்தலால்.

எனினும்,

இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு

கலங்கிடா திருந்த எனைக் கலக் குறுத்து்.

செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்: -- 50

ஊனமற் றெவைதாம் உறினுமே பொறுத்தும்,

வானம் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,

தானமும் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து

ஞானம் பொய்க்க நசிக்குமோர் சாதி.

சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம்; 55

சாத்திர மின்றேற் சாதி யில்லை.

பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்

பொய்ம்மை யாகிப் புழுவென மடிவர்.

நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில்,

அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் -- 60

மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும்.

இவர்தாம் --

உடலும் உள்ளமும் தம்வச மிலராய்

நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும்,

பெரிதிலை; பின்னும் மருந்திதற் குண்டு. 65

செய்கையும் சீலமுங் குன்றிய பின்னரும்

உய்கைக் குரிய வழிசில உளவாம்.

மற்றிவர்,

சாத்திரம் -- (அதாவது, மதியிலே தழுவிய

கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்) -- 70

ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்

மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை.

இந்தநாள் எமது தமிழ்நாட் டிடையே

அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார்

தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்: 75

ஒருசார்,

‘மேற்றிசை வாழும் வெண்ணிற மாக்களின்

செய்கையும் நடையும் தீனியும் உடையும்

கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை

யவற்றினுஞ் சிறந்தன; ஆதலின் அவற்றை 80

முழுதுமே தழுவி மூழ்கிடி னல்லால்,

தமிழச் சாதி தரணி மீதிராது.

பொய்த்தழி வெய்தல் முடி’ பெனப் புகலும்.

நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை

வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ, 85

‘ஏ ஏ! அஃதுமக் கிசையா’ தென்பர்.

‘உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்துநீர்

தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந்தடை

பல, அவை நீங்கும் பான்மைய வல்ல’

என்றருள் புரிவர். இதன்பொருள் ‘சீமை 90

மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்

சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர்’

என்பதே யாகும். இஃதொரு சார்பாம்.

பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு

‘நமது மூதாதையர் (நாற்பதிற் றாண்டின் 95

முன்னிருந் தவரோ, முந்நூற் றாண்டிற்கு

அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ, ஆயிரம்

ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ?

பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்

தவரோ? புராண மாக்கிய காலமோ? 100

சைவரோ? வைணவ சமயத் தாரோ?

இந்திரன் தானே தனிமுதற் கடவுள்

என்றுநம் முன்னோர் ஏத்திய வைதிகக்

காலத் தவரோ? கருத்திலா தவர்தாம்

எமது மூதாதையர் ரென்பதிங் கெவர்கொல்?) 105

நமது மூதாதையர் நயமுறக் காட்டிய

ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்

ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே

தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு.

எனில்அது தழுவல் இயன்றிடா வண்ணம 110

கலிதடை புரிவன். கலியின் வலியை

வெல்லலா காதென விளம்புகின் றனரால்.

நாசங் கூறும் ‘நாட்டு வயித்தியர்’

இவராம். இங்கிவ் விருதலைக் கொள்ளியின்

இடையே நம்மவர் எப்படி உய்வர்? 115

விதியே! விதியே! தமிழச் சாதியை

என்செயக் கருதி யிருக்கின் றாயடா?


                 விதி்


மேலைநீ கூறிய விநாசப் புலவரை

நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்

எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும்


120

மற்றவை தழுவி வாழ்வீ ராயின்,

அச்சமொன்று இல்லை. ஆரிய நாட்டின்

அறிவும் பெருமையும்............... 123



----------------------------------------------


தமிழ் நாடு


வாழிய செந்தமிழ்


ஆசிரியப்பா.



வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு!

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!

நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!

அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!

ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்

சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!

நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!


--------------------------------------


சுதந்திரப் பள்ளு


சுதந்திரப் பெருமை



“தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவரி திரும்பியும்

வருவாரோ?” என்னும் வர்ண மெட்டு


வீர சுதந்திரம் வேண்டிநின் றார்பின்னர்

  வேறொன்று கொள்வாரோ? -- என்றும்

ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்

  அறிவைச் செலுத்து வாரோ? (வீர) 1


புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்

  பொய்யென்று கண்டாரேல் -- அவர்

இகழுறும் இனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு

  இச்சையுற் றிருப்பாரோ?


(வீர) 2


பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்

  பெற்றியை அறிந்தாரேல் -- மானம்

துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது

  சுகமென்று மதிப்பாரோ?

(வீர) 3


மானுட ஜென்மம் பெறுவதற் கரிதெனும்

  வாய்மையை உணர்ந்தாரேல் -- அவர்

ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற

  உடன்படு மாறுளதோ?


(வீர) 4


விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்

  மின்மினி கொள்வாரோ? --

கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்

  கைகட்டிப் பிழைப்பாரோ? (வீர) 5


மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்

  மாண்பினை யிழப்பாரோ?

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்

  கைகொட்டிச் சிரியாரோ?

(வீர) 6


வந்தே மாதரம் என்று வணங்கியபின்

  மாயத்தை வணங்குவரோ?

வந்தே மாதரம் ஒன்றே தாரகம்

  என்பதை மறப்பாரோ? (வீர) 7



------------------------------------------------------


சுதந்திரப் பள்ளு


சுதந்திரப் பயிர்



கண்ணிகள்


தண்ணீர்விட் டோவளர்த்தோம்?

  சர்வேசா! இப்பயிரைக்

கண்ணீராற் காத்தோம்;

  கருகத் திருவுளமோ 1


எண்ணமெலாம் நெய்யாக

  எம்முயிரி னுள்வளர்ந்த

வண்ண விளக்கிஃது

  மடியத் திருவுளமோ? 2


ஓராயிர வருட

  ஓய்ந்து கிடந்தபினர்

வாராது போலவந்த

  மாமணியைத் தோற்போமோ? 3


தர்மமே வெல்லுமெனுஞ்

  சான்றோர்சொல் பொய்யாமோ?

கர்ம விளைவுகள் யாம்

  கண்டதெலாம் போதாதோ? 4


மேலோர்கள் வெஞ்சிறையில்

  வீழ்ந்து கிடப்பதுவும்

நூலோர்கள் செக்கடியில்

  நோவதுவுங் காண்கிலையோ? 5


எண்ணற்ற நல்லோர்

  இதயம் புழுங்கியிரு

கண்ணற்ற சேய்போற்

  கலங்குவதுங் காண்கிலையோ? 6


மாதரையும் மக்களையும்

  வன்கண்மை யாற்பிரிந்து

காத லிளைஞர்

  கருத்தழிதல் காணாயோ? 7


எந்தாய் நீதந்த

  இயற்பொருளெ லாமிழந்து

நொந்தார்க்கு நீயன்றி

  நோவழிப்பார் யாருளரோ?

8


இன்பச் சுதந்தரம்நின்

  இன்னருளாற் பெற்றதன்றோ?

அன்பற்ற மாக்கள்

  அதைப் பறித்தாற் காவாயோ?

9

\பு{[குறிப்பு]: 1919 ஆம் வருடப் பதிப்பில் இப்பாடலின் தலைப்பு ‘சுதந்திர தாகம்’ என்பதாகும்.


[பா-ம்.]: ‘மாக்க ளதை’ -- நாட்டுப் பாட்டு}

 


வானமழை யில்லையென்றால்

  வாழ்வுண்டோ? எந்தை சுயா

தீனமெமக் கில்லையென்றால்

  தீனரெது செய்வோமே? 10


நெஞ்சகத்தே பொய்யின்றி

  நேர்ந்ததெலாம் நீதருவாய்;

வஞ்சகமோ எங்கள்

  மனத்தூய்மை காணாயோ?

11


பொய்க்கோ உடலும்

  பொருளுயிரும் வாட்டுகிறோம்?

பொய்க்கோ தீராது

  புலம்பித் துடிப்பதுமே? 12


நின்பொருட்டு நின்னருளால்

  நின்னுரிமை யாம் கேட்டால்

என்பொருட்டு நீதான்

  இரங்கா திருப்பதுவோ? 13


இன்று புதிதாய்

  இரக்கின்றோமோ? முன்னோர்

அன்றுகொடு வாழ்ந்த

  அருமையெலாம் ஓராயோ? 14


நீயும் அறமும்

  நிலைத்திருத்தல் மெய்யானால்

ஓயுமுனர் எங்களுக்கிவ்

  ஓர்வரம் நீ நல்குதியே. 15



----------------------------------------


சுதந்திரப் பள்ளு


சுதந்திர தாகம்



[ராகம் -- கமாஸ்] [ தாளம் -- ஆதி்]


என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?

என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?

அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே,

ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!

வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?

மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ? 1


பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?

பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?

தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?

தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

அஞ்சலென் றருள்செயுங் கடமையில் லாயோ?

ஆரிய நீயும்நின் அறம்மறந் தாயோ?

வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே,

வீரசிகாமணி, ஆரியர் கோனே! 2


--------------------------------------------


சுதந்திரப் பள்ளு


சுதந்திர தேவியின் துதி்



[விருத்தம்]


இதந்தரு மனையின் நீங்கி

  இடர்மிகு சிறைப்பட் டாலும்

பதந்திரு இரண்டும் மாறிப்

  பழிமிகுத் திழிவுற் றாலும்

விதந்தரு கோடி இன்னல்

  விளைந்தெனை அழித்திட் டாலும்

சுதந்திர தேவி! நின்னைத்

  தொழுதிடல் மறக்கி லேனே. 1


நின்னருள் பெற்றி லாதார்

  நிகரிலாச் செல்வ ரேனும்

பன்னருங் கல்வி கேள்வி

  படைத்துயர்ந் திட்டா ரேனும்

பின்னரும் எண்ணி லாத

  பெருமையிற் சிறந்தா ரேனும்

அன்னவர் வாழ்க்கை பாழாம்

  அணிகள்வேய் பிணத்தோ டொப்பார்.

2


தேவி! நின்னொளி பெறாத

  தேயமோர் தேய மாமோ?

ஆவியங் குண்டோ? செம்மை

  அறிவுண்டோ? ஆக்க முண்டோ?

காவிய நூல்கள் ஞானக்

  கலைகள் வேதங்க ளுண்டோ?

பாவிய ரன்றோ நின்தன்

  பாலனம் படைத்தி லாதார்? 3


ஒழிவறு நோயிற் சாவார்

  ஊக்கமொன் றறிய மாட்டார்

கழிவுறு மாக்க ளெல்லாம்

  இகழ்ந்திடக் கடையில் நிற்பார்

இழிவறு வாழ்க்கை தேரார்

  கனவிலும் இன்பங் காணார்

அழிவறு பெருமை நல்கும்

  அன்னை நின்அருள் பெறாதார்.  

4


\பு{[பாட பேதம்]: ‘சுதந்திரத் தேவி!’

‘மாக்களெல்லா மிகழ்ந்திட’

-- ஜன்ம பூமி}


வேறு


தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து

ஆவியும் தம தன்பு அளிப்பவர்

மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்

தாவில் வானுல கென்னத் தகுவதே. 5


அம்மை உன்றன் அருமை யறிகிலார்

செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்

இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை

வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே.

6


மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால்

போற்றி நின்னைப் புதுநிலை யெய்தினர்;

கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும்நின்

பேற்றி னைப்பெறு வேமெனல் பேணினர். 7


அன்ன தன்மைகொள் நின்னை அடியனேன்

என்ன கூறி இசைத்திட வல்லனே?

பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்

சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன். 8


பேர றத்தினைப் பேணுநல் வேலியே!

சோர வாழ்க்கை, துயர்மிடி யாதிய

கார றுக்கக் கதித்திடு சோதியே!

வீர ருக்கமு தே நினை வேண்டுவேன். 9


---------------------------------------------


சுதந்திரப் பள்ளு


விடுதலை



(ராகம் -- பிலஹரி)

விடுதலை! விடுதலை! விடுதலை!


பறைய ருக்கும் இங்கு தீயர்

  புலைய ருக்கும் விடுதலை!

பரவரோடு குறவ ருக்கும்

  மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்ட தீமையற்ற

  தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

  வாழ்வம் இந்த நாட்டிலே. 1


ஏழை யென்றும் அடிமை யென்றும்

  எவனும் இல்லை, ஜாதியில்

இழிவு கொண்ட மனிதரென்பது

  இந்தி யாவில் இல்லையே

வாழி கல்வி செல்வம் எய்தி

  மனம கிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒருநிகர்

  சமானமாக வாழ்வமே. 2


மாதர் தம்மை இழிவு செய்யும்

  மடமை யைக்கொ ளுத்துவோம்;

வைய வாழ்வு தன்னில் எந்த

  வகையி னும்ந மக்குளே

தாத ர்என்ற நிலைமை மாறி

  ஆண்க ளோடு பெண்களும்

சரிநி கர்ச மான மாக

  வாழ்வம் இந்த நாட்டிலே 3



-----------------------------------------


சுதந்திரப் பள்ளு


பள்ளர் களியாட்டம்


[ராகம் -- வராளி] [தாளம் -- ஆதி]


பல்லவி



ஆடுவோமே -- பள்ளுப் பாடுவோமே;

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று


சரணங்கள்


பார்ப்பானை ஐயரென்ற

  காலமும்போச்சே -- வெள்ளைப்

பரங்கியைத் துரையென்ற

  காலமும்போச்சே -- பிச்சை

ஏற்பாரைப் பணிகின்ற

  காலமும்போச்சே -- நம்மை

ஏய்ப்போருக் கேவல் செய்யும்

  காலமும்போச்சே. (ஆடுவோமே) 1


எங்கும் சுதந்திரம்

  என்பதேபேச்சு -- நாம்

எல்லோரும் சமமென்ப

  துஉறுதியாச்சு

சங்குகொண் டேவெற்றி

  ஊதுவோமே -- இதைத்

தரணிக்கெல் லாமெடுத்து

  ஓதுவோமே. (ஆடுவோமே) 2


எல்லோரும் ஒன்றென்னும்

  காலம்வந்ததே -- பொய்யும்

ஏமாற்றும் தொலைகின்ற

  காலம்வந்ததே -- இனி

நல்லோர் பெரியரென்னும்

  காலம்வந்ததே -- கெட்ட

நயவஞ்சக் காரருக்கு

  நாசம்வந்ததே. (ஆடுவோமே) 3


உழவுக்கும் தொழிலுக்கும்

  வந்தனைசெய்வோம் -- வீணில்

உண்டுகளித் திருப்போரை

  நிந்தனைசெய்வோம்

விழலுக்கு நீர்ப் பாய்ச்சி

  மாயமாட்டோம் -- வெறும்

வீணருக்கு உழைத்துடலம்

  ஓயமாட்டோம். (ஆடுவோமே) 4


நாமிருக்கும் நாடுநமது

  என்பதறிந்தோம் -- இது

நமக்கே உரிமையாம்

  என்பதறிந்தோம் -- இந்தப்

பூமியில் எவர்க்கும் இனி

  அடிமைசெய்யோம் -- பரி

பூரணனுக் கேயடிமை

  செய்து வாழ்வோம். (ஆடுவோமே) 5


--------------------------------------------------------


தேசிய இயக்கப் பாடல்கள்


சத்ரபதி சிவாஜி


தன் சைனியத்திற்குக் கூறியது


ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!

ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

சேனைத் தலைவர்காள்! சிறந்தமந் திரிகாள்!

யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! 5

அதிரத மன்னர்காள்! துரகதத் ததிபர்காள்!

எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!

வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!

காலனுருக் கொளும் கணைதுரந் திடுவீர்.

மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச 10

செற்றடுந் திறனுடைத் தீர ரத்தினங்காள்!

யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!

தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!

மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா

ஆற்றல்கொண் டிருந்ததிவ் வரும்புகழ் நாடு!

15

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்

பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!

தர்மமே உருவமாத் தழைத்தபேர ரசரும்

20

நிர்மல முனிவரும் நிறைந்தநன் னாடு!

வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை

ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!  

\பு{[குறிப்பு]: பாடலின் போக்கைக் கவனிக்குமிடத்து, இது

ர்த்தியாகவில்லை யென்றும், இறுதியில் இன்னுஞ் சிலவரிகள்

இருந்திருக்கலாமோ வென்றும் கருதவேண்டியுளது என்ற குறிப்பு

1937 ஆம் வருடப் பதிப்பில் காணப்படுகிறது.}

பாரதப் பூமி பழம்பெரும் பூமி;

நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்!

25

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்

நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்!


நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்!

வானக முட்டும் இமயமால் வரையும் 30

ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்

காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்

தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்

இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்

உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!

35

பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க

மைந்நிற முகில்கள் வழங்குபொன் னாடு!

தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்

ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!

ஊனமொன் றறியா ஞானமெய்ப் பூமி! 40

வானவர் விழையும் மாட்சியார் தேயம்!

பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?

நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்!

தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,

பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும்

45

ஞானமும் அறியா நவைபுரி பகைவர்,

வானகம் அடக்க வந்திடும் அரக்கர்போல்

இந்நாள் படைகொணர்ந்து இன்னல்செய் கின்றார்!

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்

பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்

50

மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு

ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!

சாத்திரத் தொகுதியைத் தாழ்த்திவைக் கின்றார்!

கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்!

எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்: 55

கண்ணியம் மறுத்தனர்; ஆண்மையுங் கடிந்தனர்;

பொருளினைச் சிதைத்தனர்; மருளினை விதைத்தனர்;

திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்;

பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்;

சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்; 60

வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்துநம்

ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்.

மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?

வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்?

மொக்குள்தான் தோன்றி முடிவது போல 65

மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்!

தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை

மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?

மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய்

ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்? 70

தாய்பிறன் கைபடச் சகிப்பவ னாகி

நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ?

பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில்

அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்;

புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு 75

அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.

மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.

ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்

யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக!

80

படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்

கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்!

சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப

மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க!

நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்

85

வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!

தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்

பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!

நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு

ஊட்டுதல் பெரிதென உன்னுவோன் செல்க!

90

ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும்

வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்.

ஆரியர் இருமின்! ஆண்கள் இங்கு இருமின்!

வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!

மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!

95

ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!

தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!

மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!

புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!

கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!

100

ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!

சோர நெஞ்சிலாத்தூ யவர் இருமின்!

தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!

பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!

உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!

105

கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!

வம்மினோ துணைவீர்! மருட்சிகொள் ளாதீர்!

நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்

புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?

மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்

110

இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்.

பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்

வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்

ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்

நற்றுணை புரிவர்; வானக நாடுறும்;

115

பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர்

வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்.

செற்றினி மிலேச்சரைத் தீர்த்திட வம்மின்!

ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!

நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!

120

வாளுடை முனையினும், வயந்திகழ் சூலினும்,

ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின்

உருளையி னிடையினும், மாற்றலர் தலைகள்

உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!

நம்இதம் பெருவளம் நலிந்திட விரும்பும்

125

வன்மியை வேரறத் தொலைத்தபின் னன்றோ

ஆணெனப் பெறுவோம்! அன்றிநாம் இறப்பினும்

வானுறு தேவர் மணியுல கடைவோம்!

வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத்

தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!

130

போரெனில் இதுபோற் புண்ணியத் திருப்போர்

பாரினில் ஒன்று பார்த்திடற் கெளிதோ?

ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி

வீட்டினைப் பெறுவதை விரும்புவார் சிலரே;

நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து

135

வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்.

வேள்வியில் இதுபோல் வேள்வியொன் றில்லை;

தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை,

முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று

தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட

140

மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்

காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

இன்னவர் இருத்தல்கண்டு இதயம் நொந் தோனாய்த்

தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்

“ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?

145

வையகத் தரசும் வானக ஆட்சியும்

போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.


மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்;

கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது;

150

வாயுலர் கின்றது; மனம்பதைக் கின்றது;

ஓய்வுறுங் கால்கள்; உலைந்தது சிரமும்;

வெற்றியை விரும்பேன்; மேன்மையை விரும்பேன்;

சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்;

எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்.

155

சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?”

எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்

கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து

சோர்வொடு வீழ்ந்தனன்; சுருதியின் முடிவாய்த்

தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்

160

வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி,

“புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்.

அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்.

உண்மையை அறியாய்; உறவையே கருதிப்

165

பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்.

வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,

நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் -- இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதர ராயினும்

வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.

170

ஆரிய! நீதிநீ அறிகிலை போலும்!

பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை.

அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?

பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்!

175

ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக!”

என்றுமெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்

குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்

அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்

மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்

180

சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்

பற்றலர் தமையெலாம் பார்க்கிடை யாக்கினன்.

விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில

இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும்

ஆரிய வீரர்காள்! அவருடை யாற்றலர்,

185

தேரில், இந் நாட்டினர், செறிவுடை உறவினர்;

நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்

செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்,

பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்,

சிறப்புடை யாரியச் சீர்மையை யறியார்.

190



-----------------------------------------------------


தேசிய இயக்கப் பாடல்கள்


கோக்கலே சாமியார் பாடல்


[இராமலிங்க சுவாமிகள் “களக்கமறப் பொது நடனம் நான் கண்டுகொண்ட

தருணம்” என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது]



களக்கமுறும் மார்லிநடம்

  கண்டுகொண்ட தருணம்

கடைச்சிறியேன் உளம்த்துக்

  காய்த்ததொரு கனிதான்


விளக்கமுறப் பழுத்திடுமோ

  வெம்பிவிழுந் திடுமோ?

வெம்பாது விழினுமென்றன்

  கரத்திலகப் படுமோ?


வளர்த்தபழம் கர்சானென்ற

  குரங்குகவர்ந் திடுமோ?

மற்றிங்ஙன் ஆட்சிசெயும்

  அணில்கடித்து விடுமோ?


துளக்கமற யான்பெற்றிங்

  குண்ணுவனோ, அல்லாலோ

தொண்டைவிக்கு மோஏதும்

  சொல்லரிய தாமே?


-------------------------------------------


தேசிய இயக்கப் பாடல்கள்


தொண்டு செய்யும் அடிமை



ச்வராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு

ஆங்கிலேய உத்தியோகச்தன் கூறுவது


[நந்தனார் சரித்திரத்திலுள்ள “மாடு தின்னும் புலையா -- உனக்கு மார்கழித் திருநாளா” என்ற பாட்டின் வர்ணமெட்டு]


தொண்டு செய்யும் அடிமை -- உனக்குச்

  சுதந்திர நினைவோடா

பண்டுகண்ட துண்டோ -- அதற்குப்

  பாத்திர மாவாயோ? (தொண்டு) 1


ஜாதிச் சண்டை போச்சோ? -- உங்கள்

  சமயச் சண்டை போச்சோ?

நீதிசொல்ல வந்தாய் -- கண்முன்

  நிற்கொ ணாது போடா.

(தொண்டு) 2


அச்சம் நீங்கி னாயோ? -- அடிமை!

  ஆண்மை தாங்கினாயோ?

பிச்சைவாங்கிப் பிழைக்கும் -- ஆசை

  பேணுத லொழித்தாயோ? (தொண்டு) 3

  

கப்ப லேறுவாயோ? -- அடிமை!

  கடலைத்தாண்டு வாயோ?

குப்பை விரும்பும்நாய்க்கே -- அடிமை!

  கொற்றத் தவிசுமுண்டோ?

(தொண்டு) 4


ஒற்றுமை பயின்றாயோ? -- அடிமை!

  உடம்பில் வலிமையுண்டோ!

வெற்றுரை பேசாதே -- அடிமை

  வீரியம் அறிவாயோ? (தொண்டு) 5


சேர்ந்து வாழுவீரோ? உங்கள்

  சிறுமைக் குணங்கள் போச்சோ?

சோர்ந்து வீழ்தல்போச்சோ -- உங்கள்

  சோம்பரைத் துடைத்தீரோ? (தொண்டு) 6


வெள்ளைநிறத்தைக் கண்டால் -- பதறி

  வெருவலை ஒழித்தாயோ?

உள்ளது சொல்வேன்கேள் -- சுதந்திரம்

  உனக்கில்லை மறந்திடடா. (தொண்டு) 7


நாடு காப்பதற்கே -- உனக்கு

  ஞானஞ் சிறிதுமுண்டோ?

வீடுகாக்கப் போடா -- அடிமை

  வேலைசெய்யப் போடா. (தொண்டு) 8


சேனை நடத்துவாயோ? -- தொழும்புகள்

  செய்திட விரும்பாயோ?

ஈனமான தொழிலே -- உங்களுக்கு

  இசைவதாகும் போடா.

(தொண்டு) 9



---------------------------------------------------


தேசிய இயக்கப் பாடல்கள்


மேத்தா திலகருக்குச் சொல்வது



(புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் சொல்லுதல்.)


[சிதம்பர பதவியாகிய முக்தியிலே, நந்தனார் அடங்காத தாகம்

கொண்டிருந்தார். அது அவரை அடிமை கொண்டிருந்த ஆண்டைக்கு மனமில்லை. அவன் நந்தனாரைப்பலவித இம்சைகளுக்கு

உட்படுத்தினான்; அதுவுமின்றிச் சேரியிலிருந்த நிதானப்

பறையர்கள் பலர் ந்தனார்சிதம்பரத்தைப் பற்றி நினைக்கலாத தென்று போதனை செய்தார்கள். அந்த நிதானஸ்தர்களிலே ஒருவர் பாடிய பாட்டின் கருத்தையும வர்ண மெட்டையும் தழுவிப்

பின்வரும் பாடல் செய்யப்பட்டிருக்கிறது.]


“ஓய் நந்தனாரே, நம்ம ஜாதிக் கடுக்குமோ, நியாயந்

தானோ நீர் சொல்லும்” என்ற வர்ண மெட்டு.

பல்லவி


ஓய் திலகரே, நம்ம ஜாதிக் கடுக்குமோ?

செய்வது சரியோ, சொல்லும்.


கண்ணிகள


முன்னறி யாப்புது வழக்கம் -- நீர்.

  மூட்டி விட்டதிந்தப் பழக்கம் -- இப்போது

எந்நகரிலுமிது முழக்கம் -- மிக

  இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம். (ஓய் திலகரே) 1


சுதந்திரம் என்கிற பேச்சு -- எங்கள்

  தொழும்புக ளெல்லாம்வீணாய்ப் போச்சு -- இது

மதம்பிடித் ததுபோ லாச்சு -- எங்கள்

  மனிதர்க் கெல்லாம்வந்த தேச்சு. (ஓய் திலகரே) 2


வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் -- அன்றி

  வேறெ வர்க்குமது தியாஜ்யம் -- சிறு

பிள்ளைகளுக் கேஉப தேசம் -- நீர்

  பேசிவைத்த தெல்லாம் மோசம். (ஓய் திலகரே) 3



---------------------------------------------------------------


தேசிய இயக்கப் பாடல்கள்


நிதானக் கட்சியார் சுதேசியத்தைப் பழித்தல்



[நநதனார் சரித்திரத்திலே சேரிப் பறையர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து நந்தனாரையும் அவரது கட்சியாரையும்

பழிக்கின்றார்கள். சேரியில் மாட்டிறைச்சி யுண்டு

புலைவாழ்வு வாழ்ந்துகொண்டு ஆண்டைப் பார்ப்பானுக்கு அடிமை செய்வதே ஸ்வர்க்க மென்றறியாமல்,

சிதம்பரப் பயித்தியங்கொண்டலையும் நந்தனாராலும், அவருடைய சீடர்களாலும் பெரிய கேடுகள் விளையக

கூடுமென்று வருத்தங்கொண்டு “நாம் என்ன செய்வோம் புலையரே இந்தப் பூமியில்லாத புதுமையைக் கண்டோம்”

என்று யோசிக்கிறார்கள். அந்தப் பாட்டின் கருத்தையும் வர்ண மெட்டையும் தழுவிப் பின்வரும் பாடல்

எழுதப்பட்டிருக்கின்றது. மேத்தா கோகலே முதலிய

நிதானஸ்தர்கள் நமது தேச விமோசன மென்னுஞ்

சிதம்பரத்தை எண்ணி ஆசைகொண்டு பரவச நிலையிலிருக்கும் திலக முனிவராலும், அவரது கட்சியாராலும் நாட்டிற்குக் கெடுதி விளையுமென்று பேசும் விஷயங்கள் அமைக்கப்

பட்டிருக்கின்றன.]


[ ராகம் -- புன்னாகவராளி ] [தாளம் -- ரூபகம்]


பல்லவி


நாமென்ன செய்வோம், துணைவரே -- இந்தப்

பூமியிலில்லாத புதுமையைக் கண்டோம். (நாம்) 1


சரணங்கள்


திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு

செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு

பலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு

பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு. (நாம்) 2


\பு{[குறிப்பு]: ‘நிதானக் கட்சியார் கூட்டம்’ என்பது ‘ஜன்ம பூமி’ தலைப்பு.}


தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்

செய்யுந் தொழில்முறை யாவையும் விட்டார்

பேசுவோர் வார்த்தை தாதா சொல்லி விட்டார்

பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார். (நாம்) 3


பட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை

பரதேசப் பேச்சில் மயங்குபவரில்லை

சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை

சர்க்காரிடம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை. (நாம்) 4


சீமைத் துணியென்றால் உள்ளங் கொதிக்கிறார்

சீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார்

தாமெத்தையோ “வந்தே” யென்று துதிக்கிறார்

தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார். (நாம்) 5



----------------------------------------------------------


தேசிய இயக்கப் பாடல்கள்


பாரத தேவியின் அடிமை



(நந்தன் சரித்திரத்திலுள்ள “ஆண்டைக் கடிமைக்

காரனல்லவே” என்ற பாட்டின் வர்ண மெட்டையும்

கருத்தையும் பின்பற்றி எழுதப்பட்டது.)


பல்லவி


அன்னியர் தமக்கடிமை யல்லவே -- நான்

அன்னியர் தமக்கடிமை யல்லவே.


சரணங்கள்


மன்னிய புகழ்ப் பாரத தேவி

தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன். (அன்) 1


இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்

திலக முனிக்கொத்த அடிமைக் காரன். (அன்) 2


வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடு போம்

ஐயன் பூபேந்தரனுக் கடிமைக் காரன். (அன்) 3


\பு{[குறிப்பு]: பழைய கட்சியார் புதுக் கட்சியாரைப் பற்றி

சர்க்காரிடம் கோள் மூட்டியும் பயனில்லை என்றாய் விட்டது.}


காலர் முன்னிற்பினும் மெய்தவறா எங்கள்

பாலர் தமக்கொத்த அடிமைக் காரன். (அன்) 4


காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரம்ம

பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன். (அன்) 5



-------------------------------------------------


தேசிய இயக்கப் பாடல்கள்


ஆங்கிலேயன் ஒரு தேசபக்தனுக்குக் கூறுவது



['நந்தன் சரித்திர'த்திலே ஆண்டை நந்தனுடைய சிதம்பர

வாஞ்சையை மற்றப் பறையர்கள் வந்து சொல்லக் கேட்டு மஹா

கோபங்கொண்டு நந்தனை நோக்கி, "சேரிமுற்றுஞ் சிவபக்தி

பண்ணும்படி விட்டையாம் அடியிட்டையாம்" என்பது

முதலான வார்த்தைகள் கூறிப் பயமுறுத்துகிறான். அதன்

குறிப்பைத் தழுவித் திருநெல்வேலி ஜில்லா கலெக்டராகிய

வின்ஸ், ஸ்ரீ சிதம்பரம்பிள்ளைக்குக் கூறியதாகப் பின்வரும்

கண்ணிகள் எழுதப்பட்டுள்ளன.  ('ஜன்ம பூமி' குறிப்பு)]


[ ராகம் -- தண்டகம்] [தாளம் -- ஆதி]


நாட்டிலெங்கும் சுவதந்திர வாஞ்சையை

  நாட்டினாய் -- கனல் -- மூட்டினாய்;

வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே

  மாட்டுவேன் -- வலி -- காட்டுவேன் (நாட்டி) 1


கூட்டம் கூடி வந்தே மாதரமென்று

  கோஷித்தாய் -- எமைத் -- தூஷித்தாய்

ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல

ஓட்டினாய் -- பொருள் -- ஈட்டினாய். (நாட்டி) 2


"கலெக்டர் வின்ஸ் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல்"

என்பது `ஜன்ம பூமி' நூலில் உள்ள தலைப்பு.


கோழைப் பட்ட ஜனங்களுக் குண்மைகள்

  கூறினாய் -- சட்டம் -- மீறினாய்

ஏழைப்பட்டிங்கு இறத்தல் இழிவென்றே

  ஏசினாய் -- வீரம் -- பேசினாய். (நாட்டி) 3


அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்

  ஆக்கினாய் -- புன்மை -- போக்கினாய்

மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை

  மீட்டினாய் -- ஆசை -- ஊட்டினாய். (நாட்டி) 4


தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்

  தூண்டினாய் -- புகழ் -- வேண்டினாய்

கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள

  காட்டினாய் -- சோர்வை -- ஓட்டினாய். (நாட்டி) 5


எங்கும் இந்தசுயராஜ்ய விருப்பத்தை

  ஏவினாய் -- விதை -- தூவினாய்

சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்

  செய்யவோ -- நீங்கள் -- உய்யவோ?



(நாட்டி) 6


சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்

  சொல்லுவேன் -- குத்திக் -- கொல்லுவேன்

தட்டிப் பேசுவோ ருண்டோ? சிறைக்குள்ளே

  தள்ளுவேன் -- பழி -- கொள்ளுவேன். (நாட்டி) 7



---------------------------------------------------


தேசிய இயக்கப் பாடல்கள்


தேசபக்தன் ஆங்கிலேயனுக்குக் கூறும் மறுமொழி



சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே

  துஞ்சிடோம் -- இனி -- அஞ்சிடோம்;

எந்த நாட்டினும் இந்த அநீதிகள்

  ஏற்குமோ? -- தெய்வம் -- பார்க்குமோ? 1


\பு{ ‘கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீ சிதம்பரம்பிள்ளை சொல்லிய மறுமொழி’ என்பது ‘ஜன்ம பூமி’ தலைப்பு.}


வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை

  வாழ்த்துவோம் -- முடி -- தாழ்த்துவோம்;

எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்

  ஈனமோ? -- அவ -- மானமோ? 2


பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளைகொண்டு

  போகவோ? -- நாங்கள் -- சாகவோ?

அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள் நாங்கள்

  அல்லமோ? -- உயிர் -- வெல்லமோ? 3


நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்

  நாய்களோ -- பன்றிச் -- சேய்களோ?

நீங்கள் மட்டும் மனிதர்களோஇது

  நீதமோ? -- பிடி -- வாதமோ? 4


பாரத தத்திடை அன்பு செலுத்துதல்

  பாபமோ? -- மனஸ் -- தாபமோ?

கூறு எங்கள் மிடிமையைத் தீர்ப்பது

  குற்றமோ -- இதில் -- செற்றமோ? 5


ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது

  ஓர்ந்திட்டோம் -- நன்கு -- தேர்ந்திட்டோம்

மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலாம்

  மலைவுறோம் -- சித்தம் -- கலைவுறோம். 6


சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்

  சாயுமோ? -- ஜீவன் -- ஓயுமோ?

இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி

  ஏகுமோ? -- நெஞ்சம் -- வேகுமோ? 7



-------------------------------------------------------


நடிப்புச் சுதேசிகள்


(பழித்தறி வுறுத்தல்)


கிளிக் கண்ணிகள்



நெஞ்சில் உரமுமின்றி்

  நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடீ -- கிளியே

  வாய்ச் சொல்லில் வீரரடீ. 1


கூட்டத்திற் கூடிநின்று

  கூவிப் பிதற்றலன்றி

நாட்டத்திற் கொள்ளாரடீ -- கிளியே

  நாளில் மறப்பா ரடீ. 2


சொந்த அரசும்புவிச்

  சுகங்களும் மாண்புகளும்

அந்தகர்க் குண்டாகுமோ? -- கிளியே

  அலிகளுக் கின்ப முண்டோ? 3


கண்கள் இரண்டிருந்தும்

  காணுந் திறமையற்ற

பெண்களின் கூட்டமடீ -- கிளியே

  பேசிப் பயனென் னடீ. 4


யந்திர சாலையென்பர்

  எங்கள் துணிகளென்பர்

மந்திரத்தாலே யெங்கும் -- கிளியே

  மாங்கனி வீழ்வ துண்டோ? 5


உப்பென்றும் சீனிஎன்றும்

  உள்நாட்டுச் சேலைஎன்றும்

செப்பித் திரிவா ரடீ -- கிளியே

  செய்வ தறியா ரடீ. 6


தேவியர் மானம் என்றும்

  தெய்வத்தின் பக்திஎன்றும்

நாவினாற் சொல்வ தல்லால் -- கிளியே

  நம்புத லற்றா ரடீ.

7


மாதரைக் கற்பழித்து

  வன்கண்மை பிறர்செய்யப்

பேதைகள் போலுயிரைக் -- கிளியே

  பேணி யிருந்தா ரடீ. 8


தேவி கோயிலிற் சென்று

  தீமை பிறர்கள்செய்ய

ஆவி பெரிதென்றெண்ணிக் -- கிளியே

  அஞ்சிக் கிடந்தா ரடீ. 9


அச்சமும் பேடிமையும்

  அடிமைச் சிறுமதியும்

உச்சத்திற் கொண்டா ரடீ -- கிளியே

  ஊமைச் சனங்க ளடீ. 10


ஊக்கமும் உள்வலியும்

  உண்மையிற் பற்றுமில்லா

மாக்களுக்கோர் கணமும் -- கிளியே

  வாழத் தகுதி யுண்டோ? 11


மானம் சிறிதென்றெண்ணி

  வாழ்வு பெரிதென்றெண்ணும்

ஈனர்க் குலகந் தனில் -- கிளியே

  இருக்க நிலைமை யுண்டோ? 12


சிந்தையிற் கள்விரும்பிச்

  சிவசிவ வென்பது போல்

வந்தே மாதர மென்பார் -- கிளியே

  மனதி லதனைக் கொள்ளார். 13


பழமை பழமையென்று

  பாவனை பேசலன்றியன

பழமை இருந்தநிலை -- கிளியே

  பாமர ரேதறிவார்? 14


நாட்டில் அவமதிப்பும்

  நாணின்றி இழிசெல்வத்

தேட்டில் விருப்புங் கொண்டே -- கிளியே

  சிறுமை யடைவா ரடீ. 15


சொந்தச் சகோதரர்கள்

  துன்பத்திற் சாதல்கண்டும்

சிந்தை இரங்கா ரடீ -- கிளியே

  செம்மை மறந்தா ரடீ. 16


பஞ்சத்தும் நோய்களிலும்

  பாரதர் புழுக்கள்போல்

துஞ்சத் தம் கண்ணாற் கண்டும் -- கிளியே

  சோம்பிக் கிடப்பா ரடீ. 17


தாயைக் கொல்லும்பஞ்சத்தைத்

  தடுக்க முயற்சியுறார்

வாயைத் திறந்து சும்மா -- கிளியே

  வந்தே மாதர மென்பார். 18



------------------------------------------------------


தேசியத் தலைவர்கள்


மஹாத்மா காந்தி பஞ்சகம்


வாழ்கநீ! எம்மான், இந்த

  வையத்து நாட்டி லெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி

  விடுதலை தவறிக் கெட்டுப்

பாழ்பட்டு நின்ற தாமோர்

  பாரத தேசந் தன்னை

வாழ்விக்க வந்த காந்தி

  மஹாத்மா நீ வாழ்க! வாழ்க! 1


அடிமைவாழ் வகன்றிந் நாட்டார்

  விடுதலை யார்ந்து செல்வம்,

குடிமையி லுயர்வு, கல்வி,

  ஞானமும் கூடி யோங்கிப்

படிமிசைத் தலைமை யெய்தும்

  படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்

முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்

  புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்! 2


வேறு


கொடியவெந் நாக பாசத்தை மாற்ற

  மூலிகை கொணர்ந்தவன் என்கோ?

இடிமின்னல் காக்கும் குடைசெய்தான்

  என்கோ? என்சொலிப் புகழ்வதிங் குனையே?

விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன

  வெம்பிணி யகற்றிடும் வண்ணம்

படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்

  படிக்கொரு சூழ்ச்சிநீ படைத்தாய்! 3


தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்

  பிறனுயிர் தன்னையும் கணித்தல்;

மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்

  கடவுளின் மக்களென் றுணர்தல்;

இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு

  இழிபடு போர், கொலை, தண்டம்

பின்னியே கிடக்கும் அரசிய லதனில்

  பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்! 4


பெருங்கொலை வழியாம் போர்வழி யிகழ்ந்தாய்,

  அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்

அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்

  அறவழி யென்றுநீ அறிந்தாய்;

நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை

  நெறியினால் இந்தியா விற்கு

வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து

  வையகம் வாழ்கநல் லறத்தே. 5


-----------------------------------------------------




Comments